*டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே பனங்காட்டூர் செட்டியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதால், இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. போச்சம்பள்ளி அருகே பனங்காட்டூர் செட்டியூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அருகேயுள்ள விவசாய நிலங்களில் உடைத்து எறிவதையும், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் கழிவுகளை அங்கேயே கொட்டி செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் விளைநிலங்களின் தரம் பாதிக்கப்படுவதோடு, விவசாய பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கடையின் எதிரே உள்ள பாசன கால்வாய் வழியாக பாரூர் பெரிய ஏரியிலிருந்து, 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் மது பாட்டில்களை உடைத்து போடுவதால், நீரோட்டம் தடைபடுவதோடு, விவசாயத்திற்கு பயன்படும் தண்ணீரும் மாசுபடுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைத்தும், மதுப்பிரியர்கள் அதனை பொருட்படுத்தாமல் அத்துமீறி வருகின்றனர்.
மது அருந்துபவர்கள் அருகேயுள்ள தென்னந் தோப்புகளுக்குள் புகுந்து, மரங்களில் உள்ள இளநீரை பறித்து மதுவுடன் கலந்து குடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
இல்லையெனில், விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
