×

பர்னிச்சர் வாங்குவதற்காக வந்த கேரளா வியாபாரி உள்பட 4 பேரிடம் ரூ.4.22 லட்சம் பறிமுதல்

*பறக்கும் படை அதிரடி

செங்கோட்டை : கேரள வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.3.65 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார்களிடம் ஒப்படைத்தனர்.கேரளாவில் இருந்து பர்னிச்சர் வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வந்த நபரிடம் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

இதன்காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்களை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தென்காசி மாவட்டம் தமிழகம்-கேரளம் எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக கேரளாவில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெம்பயம் பகுதியை சேர்ந்த திவாகரன் மகன் அனில் குமார் (48) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவர் பர்னிச்சர் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

ஆனாலும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி ஆற்றுப்பாலத்தில் நேற்று மாலை பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபரை மறித்து சோதனை செய்ததில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பறக்கும் படையினர் நடத்திய விசாரணையில், கயத்தாறு, ஆத்திகுளம், முருகன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பையா (24) என்பதும், ஆடு வியாபாரியான இவர் ஆடு விற்றப் பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இருப்பினும் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அம்பை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அம்பை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பை- தென்காசி சாலையில் மன்னார்கோவில் விலக்கு பகுதியில் அம்பை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மற்றும் மற்றும் தலைமைக் காவலர் அய்யம் பெருமாள் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஆம்பூரில் இருந்து அம்பை நோக்கிச் சென்ற காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அம்பை அருகேயுள்ள வைராவிகுளத்தைச் சேர்ந்த ராட்சமுத்து ரங்கசாமி என்பவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறியும், முறையான ஆவணங்கள் இன்றியும் காரில் ரூ.1.15 லட்சத்தை கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அம்பை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தாசில்தார் வைகுண்டத்திடம் ஒப்படைத்தனர்.

களக்காடு: நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் களக்காடு அருகே திருக்குறுங்குடி நம்பிகோவில் செக்போஸ்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை தாலுகா கோட்டுக்கால் ஊரைச் சேர்ந்த அருண் என்பவரின் காரை மறித்து சோதனை நடத்தினர்.

இதில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.57ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த பணத்தை பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர் .

Tags : Kerala ,Sengottai ,Kerala… ,
× RELATED 300 மின்சார சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம்