×

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஏப்.1ம் தேதி தேரோட்டம்

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இது பக்தர்களால் பெருமையோடு வடபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இந்தாண்டு திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று காலை 8.35 மணியளவில் கொடியேற்றம் ஏற்றப்பட்டது. இதையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் பக்தர்களின் “அரோகரா அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், இரூர், பாடாலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி, சத்திரமனை, மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதில் திருக்கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் காலை, இரவு தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடைபெறும். வருகிற 30-ம் தேதி இரவு 7.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. 31-ம் தேதி இரவு குதிரை வாகனம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 1-ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 4.00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 2-ம்தேதி மாலை 7 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைகின்றன. பின்னர் இரவு 7 மணிக்கு தீர்த்தவாரியும், கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

3-ம் தேதி காலை 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு மற்றும் சுவாமி புறப்பட்டு சிவன் கோயிலுக்கு வந்தடைதல். 4-ம் தேதி காலை 10 மணிக்கு மலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 10 மணிக்கு செட்டிகுளம் கடை வீதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் பஞ்ச வீதி உலா நடக்கிறது.

Tags : Panguni Uttaram festival ,Chettikulam Thandayuthapani Swamy temple ,Padalur ,Alathur taluka ,Thandayuthapani Swamy temple ,Chettikulam, Alathur taluka, Perambalur district ,Vadapalani ,
× RELATED இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்;...