புதுடெல்லி: புதுச்சேரி, கேரளா, அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. கடைசி நாளில் மனு தாக்கல் செய்யவேட்பாளர்கள் குவிந்ததால் தேர்தல் அலுவலகங்கள் களைக்கட்டியது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த 15ம் தேதி வெளியானது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது.
புதுச்சேரியில் முதல் 2 நாளில் யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. கடந்த 18ம் தேதி அமாவாசை தினத்தில் இருந்து மனுதாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த 22ம்தேதி (வெள்ளி) முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட 118 பேர் ஒரேநாளில் மனுதாக்கல் செய்தனர். மாகேயில் நேற்று முன்தினம் ஒருவர் மனுதாக்கல் செய்தார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு இதுவரை 119 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்குள் மட்டுமே மனுதாக்கல் செய்ய முடியும் என்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்புடன் காணப்பட்டன. தேஜ கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிந்துவிட்ட நிலையில் 12 தொகுதிக்கு அதற்கான வேட்பாளர்கள் மனு கொடுத்துவிட்ட நிலையில் மீதமுள்ள 18 பேர் இன்று தங்களது வேட்பு மனுக்களை தங்களுக்கான துணை துணை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர்.
அதேபோல் திமுக, காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணியிலும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்ட நிலையில் அக்கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மேலும் தவெக மற்றும் தேர்தலுக்காக புதிதாக முளைத்த புதிய கட்சிகளின் வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத மாஜிக்கள் சுயேட்சைகளாக போட்டியிடவும் முடிவெடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசிநாள் என்பதால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் (புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம்) உள்ள 17 துணை தேர்தல் அதிகாரி அலுவலகங்கள் காலை முதலே பரபரப்புடன் காணப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க சில மனுதாக்கல் அலுவலகங்களில் டோக்கன் முறையும் பின்பற்றப்பட்டன. தேசிய, மாநில கட்சிகள், சுயேட்சைகள் என அனைவரும் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் துணை தேர்தல் அதிகாரி அலுவலகங்கள் களைகட்டின.
அங்கு மத்திய பாதுகாப்பு கம்பெனி படையினருடன் இணைந்து தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நன்னடத்தை விதிமீறல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடையும் நிலையில் நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அப்போது முறையாக தேர்தல் பிரமான பத்திரம் அளிக்காத மனுக்கள் தள்ளுபடியாகும். அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் வேட்பாளர்கள் உள்ளிட்ட மனுதாக்கல் அளித்த அனைவரும் தங்களது மனுவை மனுதிரும்ப திரும்ப பெற 26ம்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அன்று மாலையே தொகுதி வாரியாக களமிறங்கும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது
கேரளம் மாநிலத்தில் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒரு அணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, பா.ஜனதா சார்பில் மற்றொரு அணி என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் போட்டியிட நேற்று வரை 362 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இதேபோல் 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் மாநில சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அம்மாநில பாஜனதா முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில் 6 கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை நேற்று இறுதி செய்தது. இதனால் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (24ம் தேதி) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற வரும் 26ம் தேதி கடைசி நாளாகும். இதனால் புதுச்சேரி, அசாம், கேரளாவில் தேர்தல் களைகட்டியுள்ளது.
