சென்னிமலை : தமிழ்நாடு அரசின் சாதனையாக சென்னிமலை அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னிமலை அருகே மேற்கு புதுப்பாளையம் முதலைமடை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வெளியேறும் உபரி நீர் அய்யம்பாளையம், மேட்டூர், சொக்கநாதபாளையம், சரளைக்காடு, அண்ணாமலைபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக சென்று எக்கட்டாம்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் கலந்து செல்கிறது. திருப்பூர் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நொய்யல் ஆற்றின் இடது கரை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முதலைமடை என்ற இடத்தில் இருந்து வெளியேறும் கீழ்பவானி வாய்க்காலின் உபரி நீரால் சற்று பாதிப்பு குறைவாக இருந்தது. அதனால் முதலைமடையில் இருந்து வெளியேறி வீணாக நொய்யல் ஆற்றில் கலக்கும் உபரி நீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் முதலைமடை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கொண்டு சென்றார். பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.12.65 கோடி மதிப்பில் எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலைபாளையம் அருகில் செல்லும் முதலைமடை ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். தற்போது தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், ‘‘வறட்சி காலங்களில் கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுவதால் தென்னை மரங்களை காப்பாற்ற போராட வேண்டியதாக இருக்கும்.
இதனால் பல விவசாயிகள் சாயக்கழிவாக இருந்தாலும் பரவாயில்லை என நொய்யல் ஆற்று தண்ணீரை தென்னை மரங்களுக்கு கொண்டு வந்து விடுவது வழக்கம். இப்படி நொய்யல் ஆற்று தண்ணீரை தென்னை மரங்களுக்கு விடும்போது கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
தற்போது நாங்கள் எதிர்பாராத வகையில் முதலைமடை ஓடையின் குறுக்கே பெரிய அளவில் தடுப்பணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுவதுடன், நொய்யல் ஆற்று பாதிப்பும் எங்களுக்கு குறைந்து, தண்ணீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்க உள்ளது.
இனி வரும் காலங்களில் இந்த தடுப்பணையில் இருந்து சென்னிமலையின் தெற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இந்த தடுப்பணை மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றனர்.
