×

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரான் மின் நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும்: 48 மணி நேரம் கெடு விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

 

துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியை இன்னும் 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். அத்தகைய தாக்குதல் நடந்தால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என ஈரான் பதிலளித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலிய படைகளின் மேற்கு ஆசியா போர் நேற்று 23வது நாளாக நீடித்தது. இப்போர் தற்போது மிக மோசமான கட்டத்தை நோக்கி நகர்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நட்பு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை அனைத்து நாடுகளும் புறக்கணித்து விட்டன. ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருப்பதால் அமெரிக்காவிலும் எரிபொருள் விலை அதிகரித்து அதிபர் டிரம்புக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் தனது சமூக ஊடக பதிவில், ‘‘அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறக்கவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலும் அழித்து விடும். மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து படிப்படியாக அனைத்து மின் நிலையங்களும் அழிக்கப்படும்’’ என மிரட்டல் விடுத்தார்.

இதற்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் நேற்று அளித்த பதிலில், ‘‘ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது உடனடியாக பதில் தாக்குதல் நடத்தப்படும். அவை மீளமுடியாத அளவுக்கு சேதம் ஏற்படுத்தும். இது நீண்டகால எரிபொருள் விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கும்’’ என்றார். மேலும், ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானின் மின் உற்பத்தி மையங்கள் குறிவைக்கப்பட்டால், ஹார்முஸ் நீர்வழிப்பாதை முற்றிலும் முழுமையாக மூடப்படும். மின் உற்பத்தி மையங்கள் மீண்டும் கட்டப்படும் வரை அவை திறக்கப்படாது. மேலும், இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை குறிவைக்கப்படும். அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள இதே போன்ற நிறுவனங்கள் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்க தளங்களைக் கொண்டுள்ள பிராந்திய நாடுகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களும் முறையான இலக்குகளாக இருக்கும்’ என எச்சரித்துள்ளது. இது மேற்கு ஆசியா போரை இன்னும் மோசமான கட்டத்தை நோக்கி நகர்த்தி உள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முற்றிலும் பொதுமக்கள் சார்ந்த இலக்குகளை தாக்குவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது. இத்தகைய தாக்குதல்கள் மிகப்பெரிய போர் குற்றமாகவும் கருதப்படுகிறது. இதற்கிடையே, ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் முக்கிய அணுசக்தி நிலையமான நடான்ஸ் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் முக்கிய அணு ஆராய்ச்சி மையத்தை சுற்றிய திமோனா, அராட் ஆகிய நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானின் கொத்து ஏவுகணைகளை இடைமறிக்க முடியவில்லை என இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவை குடியிருப்பு பகுதிகளை தாக்கின. இதில் 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இரு நகரங்களில் இருந்தும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இப்போரில் 92 சதவீத ஈரான் ஏவுகணை, டிரோன்களை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்த நிலையில், இந்த தாக்குதல் இஸ்ரேலை மிகுந்த ஆத்திரமூட்டி உள்ளது. அதே சமயம் இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தி உள்ளது.

 

Tags : US ,President Trump ,Iran ,Strait of Hormuz ,Dubai ,Gulf region ,
× RELATED அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல்!