- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு
- வங்கம்
- கொல்கத்தா
- மம்தா பானர்ஜி
- முதல் அமைச்சர்
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, தொடர்ந்து 4வது முறையாக வெற்றி பெறுவதற்கான பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அதன் முதற்கட்டமாக அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 10 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
* பெண்களுக்கு நல உதவி வழங்கும் லட்சுமிர பந்தர் திட்ட மாத நிதி ரூ.500 உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ.1,700 ஆகவும், பொதுப் பிரிவுப் பெண்களுக்கு ரூ.1,500 ஆகவும் உயர்கிறது.
* வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்துதல் மற்றும் சுய உதவிக் குழுக்களின் அமைப்பில் கடன் புழக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பை 44.7 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
* கர்மாஞ்சலி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், காவல் படையில் பெண் பணியாளர்களின் சேர்க்கையை அதிகரித்தல் மற்றும் ‘ரத்திரேர் சாத்தி’ மொபைல் செயலி மூலம் வலுவான பாதுகாப்பு வழிமுறைகள் உருவாக்கப்படும்.
* கொல்கத்தாவின் முக்கிய சந்திப்புகளில் பெண் காவல்துறை அதிகாரிகளால் நடத்தப்படும் ‘பிங்க் பூத்கள்’ மற்றும் முக்கிய சாலைகளில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட இரவு ரோந்துக் குழுக்கள் அமைக்கப்படும்.
* வக்பு சொத்துக்களைப் பாதுகாத்து சமூக நலனுக்காகப் பயன்படுத்துதல்; ஆலியா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை விரிவுபடுத்துதல்; சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள 27 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மென்திறன் பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்படும்.
* யோக்யஸ்ரீ பயிற்சித் திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலமும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்திலும் எஸ்சி, எஸ்டி மாணவர் விடுதி விரிவுபடுத்தப்படும்.
* மஹதோ மற்றும் கிசான் சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் எஸ்டி அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கான முயற்சி தீவிரப்படுத்தப்படும். பழங்குடியின சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதரவளிக்கவும், நிதிசார் உள்ளடக்கத்தை மேம்படுத்தவும் பெரிய பகுதி பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்.
* மேற்குவங்கத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் சுகாதார முகாம்கள் தொடங்கப்படும். துவாரே சிகித்சா முகாம்கள் மூலம், மக்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே தரமான சுகாதார சேவைகளைப் பெறுவார்கள்.
* பங்களார் யுவ-சாத்தி திட்டத்தின் மூலம் வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.
* மேற்குவங்கத்தில் விவசாயச் சூழலை வலுப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் ரூ.30,000 கோடி சிறப்பு வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்படும்.
* மேற்குவங்கத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உறுதியான வீடும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் வழங்கப்படும்.
* பங்களார் சிக்ஷாயதானா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் ஒரு பெரிய உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* உலகத்தரம் வாய்ந்த தளவாடங்கள், துறைமுகங்கள் மற்றும் வர்த்தக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் மேற்கு வங்கத்தை கிழக்கு இந்தியாவின் வர்த்தக மையமாக மாற்றப்படும்.
* தகுதியுள்ள அனைத்து முதிய குடிமக்களையும் உள்ளடக்கும் வகையில் படிப்படியாக நலத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
* மேற்குவங்கத்தில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும். மேலும் நகராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
