×

பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.30 வரை உயர்த்தியது எண்ணெய் நிறுவனங்கள்!!

சென்னை: பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.30 வரை உயர்த்தி இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயல் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் ரூ.99.87க்கு விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெட்ரோல் தற்போது ரூ.101.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண வகை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பிரீமியம் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா போரால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் சர்வதேச அளவில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனா, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.2.35 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக எச்.பி.சி.எல் நிறுவனம் டீலர்களுக்கு அறிக்கை வாயிலாக தெரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில பெட்ரோல் பம்ப் சங்க தலைவர் அர்ஷ்விந்தர் மோங்கியோ கூறும்போது, பிரீமியம் பெட்ரோல் தற்போது 105.16க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இனி 107.13 ஆக விற்பனை செய்யப்படும் என்றார். சிறந்த எஞ்சின் செயல்பாடு மற்றும் கூடுதல் மைலேஜ் கிடைப்பதற்காக ‘பிரீமியம் பெட்ரோல்’ பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானோர் வாகனங்களில் இன்ஜினை பராமரிக்க இந்த வகை பெட்ரோலையே பயன்படுத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Hindustan Petroleum ,
× RELATED பிரீமியம் பெட்ரோல் விலையை...