புதுடெல்லி: ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை அந்த நாடு மூடியுள்ளதால், சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் டிரம்பின் எச்சரிக்கையால் ‘நேட்டோ’ கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 21 நாட்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, உலக நாடுகளின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மூடியது. ‘எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும்’ என்று ஈரான் அறிவித்த போதிலும், போர் அபாயம் காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் கப்பல்களுக்கான பாதுகாப்பை ரத்து செய்தன. இதன் விளைவாக, அந்த கடல்வழியில் கப்பல் போக்குவரத்து 70 சதவீதத்திற்கும் மேல் குறைந்து போனது. கடந்த சில வாரங்களாகவே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலரை கடந்து விற்பனையாவதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு இடையே கடும் கருத்து மோதல் வெடித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறுகையில், ‘கடல்வழிப் பாதையை மீண்டும் திறப்பதற்கான சிறந்த வழிமுறைகள் குறித்து நேட்டோ கூட்டணி நாடுகள் ஆலோசித்து வருகின்றன. ஆனால், இதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை’ என்று தெரிவித்தார். அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பாதுகாப்புப் படையில் இணைய இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அவ்வாறு அமெரிக்காவுடன் கைகோர்த்தால், அது ஈரானுடன் நேரடி போருக்கு வழிவகுக்கும் என்று அந்த நாடுகள் அஞ்சுகின்றன.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘ஈரானின் இலக்குகளை முழுமையாக அழித்துவிட்டு, அதன் பிறகு இந்த கடல்வழிப் பாதையின் பாதுகாப்புப் பொறுப்பை அதன் மூலம் பலன் பெறும் நாடுகளிடமே விட்டுவிட அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா யாரையும் பாதுகாக்கும் குடையாக இருக்க முடியாது. இதில் நேட்டோ நாடுகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த அமைப்பிற்கு எதிர்காலம் இருக்காது’ என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை பிரிவு தலைவர் காஜா கலாஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர், போரைத் தவிர்த்து ராஜதந்திர ரீதியாக இந்தப் பிரச்னையை அணுக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா தனது நீண்டகால திட்டம் மூலம் சீனாவை இந்தப் பிரச்னைக்குள் இழுக்க முயற்சிப்பது நேட்டோ நாடுகளிடையே மேலும் விரிசலை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த பிடிவாதமான போக்கும், ஐரோப்பிய நாடுகளின் தற்காப்பு நிலைப்பாடும் ‘நேட்டோ’ என்கிற தற்காப்பு அமைப்பை வணிக ரீதியான உடன்படிக்கையாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் இந்த முட்டுக்கட்டையானது, நேட்டோ அமைப்பின் ஒற்றுமையை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பில் பெரிய மாற்றத்தை நோக்கி தள்ளியுள்ளது. ஈரானுடனான இந்த மோதலில் நேட்டோ நாடுகள் நேரடியாகப் பங்கேற்காமல் கடல்வழிப் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகின்றன என்பதே தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் இந்தப் போருக்காக ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற திட்டத்தின் கீழ் 200 பில்லியன் டாலர் நிதியை நாடாளுமன்றத்திடம் கோரியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், ‘இந்த போரை முடிவுக்கு கொண்டு வர குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. தீவிரவாதிகளை ஒழிக்க அதிக பணம் தேவைப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்தால் ஈரான் போர் இப்போதைக்கு முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலரை கடந்து உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை சீராக்க, வெனிசுலா மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளது. இந்த எரிசக்தி போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
