×

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: தொகுதி உடன்பாடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்

 

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி உடன்பாடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக, விசிக இடையே இதுவரை முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 தொகுதிகளில் விசிக வென்றது. இந்த முறை கூடுதலாக தொகுதிகளை வழங்க வேண்டும் என்று விசிக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போதைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் தொகுதிகளை குறைத்து வழங்குவதுடைய திட்டமிடலில் திமுக இருந்து வருகிறது. இந்த நிலையில் விசிகவுடன் எப்போது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை 9.30 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறையை விட இந்த தேர்தலில் 8 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக தரப்பில் கடந்த முறையை விட கூடுதலாக ஒரு இடத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் தொகுதிகள் கொடுக்கப்பட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக விசிக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது உடன்பாடு ஏற்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags : Thirumavalavan ,CM MK Stalin ,Alwarpet, Chennai ,Chennai ,Tamil Nadu Assembly elections ,
× RELATED சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 250...