×

சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு; அதிமுக கூட்டணியில் தொடரும் இழுபறி: சென்னையில் போட்டியிட கூட்டணி கட்சிகள் தயக்கம்

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறியும், குழப்பமும் நீடித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிட அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் தயக்கம் காட்டி வருவது அதிமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான திமுக மிகவும் வலுவாக உள்ளது. இதனால், அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தது 5 முதல் 6 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 10 தொகுதிகளில் மட்டும் போட்டியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், பாமக, தமாகா, அமமுக, புதியநீதி கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் சென்னையில் தங்களுக்கு எந்த தொகுதியும் வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கறாராக கூறியுள்ளன.

பாஜவின் நிபந்தனையும் அதிமுகவின் மறுப்பும்:
கூட்டணி கட்சிகள் சென்னையை தவிர்க்கும் நிலையில், பாஜ மட்டுமே சென்னையில் அதிக தொகுதிகளை கேட்டு வருகிறது. தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், விருகம்பாக்கம், துறைமுகம், வில்லிவாக்கம் ஆகிய 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை தங்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என பாஜ வலியுறுத்துகிறது. ஆனால், இந்த தொகுதிகள் அதிமுக மாவட்ட செயலாளர்களின் சொந்த தொகுதிகளாக இருப்பதால், அவற்றை விட்டுத்தர முடியாது என எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மாற்றாக, துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டும் பாஜவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்தாலும், அதை பாஜ ஏற்க மறுத்து வருவதாலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், பெயரளவுக்கு ஏதோ ஒரு தொகுதியை ஒதுக்குவதை விடுத்து, தங்களுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் மட்டுமே தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளன. அதன்படி கடலூர், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்குள் மட்டுமே சீட் கேட்கிறது பாமக. தமாகா ஈரோடு மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் சீட் கேட்கிறது. அமமுக தென் மாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை கோருகிறது. புதியநீதி கட்சி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சீட் கேட்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் கூட்டணிக்குள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் முழுமை பெறாத நிலையில், கூட்டணி கட்சிகளின் இத்தகைய பிடிவாதத்தால் அதிமுக தலைமை கடும் அதிருப்தியிலும், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலிலும் தவித்து வருகிறது. இன்னும் சில தினங்களில் பேச்சுவார்த்தையை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.

Tags : Atymuka Khatani ,Chennai ,Supreme Alliance ,
× RELATED அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு: தொடரும்...