×

பாமக கட்சியின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரிய வழக்குக்கு விதித்த தடையை நீக்க கோரி ராமதாஸ் முறையீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

 

சென்னை: கட்சியின் பெயர், சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை கோரி பாமக நிறுவனர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று பாமக பொதுச்செயலாளர் தரப்பின் கோரிக்கையை உரிமையியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காததால், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்திருந்ததை மறைத்து அன்புமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதாக ராமதாஸ் தரப்பில் நேற்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.

மேலும், தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கட்சி சின்னம் தொடர்பான வழக்குக்கு தடை பெற்றுள்ளதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Tags : RAMADAS ,BAMAKA ,CHENNAI ,Chennai High Court ,Anbumani ,
× RELATED முதல்வரின் சிறப்பான ஆட்சியால்...