×

2021ல் நடந்த கொலை உள்ளிட்ட குற்றங்கள் 2025ல் வெகுவாக குறைந்தது போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகம்தான் முதலிடம்: உள்துறை செயலாளர், டிஜிபி கூட்டாக பேட்டி

சென்னை: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த கொலை உள்ளிட்ட குற்றங்களுடன் ஒப்பிடும் போது கடந்த 5 ஆண்டுகளில் மிக குறைவாகவே நடந்துள்ளது என்றும், நாட்டிலேயே போதை பொருள் ஒழிப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மற்றும் டிஜிபி வெங்கடராமன் கூட்டாக தெரிவித்தனர். தலைமை செயலகத்தில் நேற்று உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஸ்வர் தயாள், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் பேசினர்.

உள்துறை செயலாளர் தீரஜ்குமார் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகணக்கை எடுத்து பார்த்த போது, எல்லா குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021ல் 1,597 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. 2024ல் 490 வழக்குகள், 2025ல் 461 வழக்குகளாக குறைந்துள்ளது. பலாத்காரம் வழக்குகள், 2021ல் 422. 2025ல் 401 வழக்குகள் பதிவாகியுள்ளது. அஜித் குமார் வழக்கில் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு முக்கிய காரணம் மக்கள் வேறு பிரிவு விசாரணை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். உண்மையை மக்கள் நம்புவதற்காக இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைத்தோம். தற்போது சிவகங்கையில் நடந்த 2வது சம்பவம் சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.

பாலியல் தொடர்பான வழக்கு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து குற்றங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதை பொருட்கள் பொறுத்தமட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2021ல் 6,800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்போது நாம் எடுத்த கடுமையான நடவடிக்கை மற்றும் எங்கெங்கே விற்பனை செய்யப்படுகிறது என்ற கண்காணித்து எடுத்த நடவடிக்கையால் 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்துள்ளோம். வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நாங்கள் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று உங்களுக்கு தெரியும். நாங்கள் போதை பொருளுக்கு எதிராக ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு செய்து உள்ளோம். இதற்காக உள்துறை அலுவலகத்தில் ஒரு பிரிவே இயங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் 25 அரசு மருத்துவமனையில் போதை பொருள் மறுவாழ்வு மையம் தொடங்கி உள்ளோம். காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறைகளுடன் இணைந்து போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருட்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை நாடுமுழுவதிலும் எடுத்த நடவடிக்கையில் தமிழ்நாடு சிறப்பாக எடுத்துள்ளது என்று சொல்லாம்.
தமிழ்நாடு அரசு ஒரு நிரந்தர டிஜிபியை நியமனம் செய்வதற்கு, நாம் யுபிஎஸ்சிக்கு ஒரு பட்டியல் அனுப்பி இருக்கோம். அந்த பட்டியலின் படி, யுபிஎஸ்சி ஒரு கமிட்டி கூட்டும், அதன் பிறகு நாம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பேசினார்.

டிஜிபி வெங்கடராமன் நிருபர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் படிப்படியாக குறைந்துள்ளது. காவல்துறையை பொறுத்தவரை சிறிய குற்றங்கள் என்றாலும் பெரிய குற்றங்கள் என்றாலும் குற்றங்களை தீவிரமாக கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் மக்களிடம் நாங்கள் எந்த குற்றங்கள் நடந்தாலும் உடனே புகார் அளிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். போக்சோ வழக்கு என்பது சமீபத்தில் வந்த சட்டம் தான். 2012-13ம் ஆண்டுகளில் அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சட்டம் தான். அதுபற்றி முதலில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.

அது குறித்து காவல்துறை மட்டும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை என அனைத்து துறைகளும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்து புகார் அளிக்கும் போது கூறுகிறோம். அதன் பயனாக பள்ளியில் ஒரு ஆசிரியர் குழந்தையை தவறு தொடுதலில் ஈடுபட்டால் அதுபற்றி தற்போது புகார் அளிக்கிறார்கள். இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. அதனால் போக்சோ வழக்குகளிலேயே சில குற்றங்கள் நடக்கிறது. அதேபோல் எஸ்சி-எஸ்டி வழக்குகள் குறித்து அதிகமாக விழிப்புணர்வு செய்து வருகிறோம். குறிப்பாக சாதி பெயர் சொன்னாலே உடனடியாக நாங்கள் எப்ஐஆர் போடுகிறோம்.

அடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது, காயங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி வழக்குகளில் அதிகமாக காவல்துறை மற்ற துறைகளுடன் சேர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்துள்ளோம். அதனால் தற்போது அதிக புகார்கள் வருகிறது. அந்த புகார்களை நாங்கள் உடனடியாக பதிவு செய்ய சொல்கிறோம். முன்பு போல் புகார் நிலையிலேயே வைப்பது, போன்ற நிலை இல்லாமல் எதுவாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதனால் தான் தற்போது அதிக வழக்குகள் போக்சோ மற்றும் எஸ்சி-எஸ்டி வழக்குகள் பதிவாகிறது.

நம் சமுதாயத்தை நாம் எதிர்மறையாக பார்த்தோம் என்று சொன்னால் மக்களுக்கு இதை வெளியில் சொல்ல ஒரு தயக்கம் வரும். சமுதாயத்தில் மக்கள் நாம் ஏதோ கீழே சென்றுவிட்டதாக நினைக்க கூடாது. அது அப்படி கிடையாது. போக்சோ குற்றங்கள் நடந்தால் புகார் வரவேண்டும். எல்லா குற்றகளையும் நாங்கள் தீர்க்க தான் இருக்கிறோம். சமீபத்தில் நடந்த குற்றங்களில் கூட 2 வழக்குகளில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. பாக்கி எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து இருக்கிறோம். அதனால் தமிழ்நாடு காவல்துறையை பொறுத்தமட்டில், மக்களுக்கு எந்த குற்றங்கள் நடந்தாலும் அது தீவிர குற்றங்கள் தான்.

அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நிலையை நாம் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்க கூடாது. அதேநேரம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகமாக புகார்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதை நாம் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து மக்கள் புகார் அளிக்காத வகையில் குறைக்க கூடாது. தூத்துக்குடி விளாத்திகுளம் வழக்கு, போக்சோ வழக்கில் வருவதால் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருக்காங்க. இன்ஸ்பெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான், அவரை நாங்கள் சஸ்பெண்ட் செய்து இருக்கிறோம். காவல்துறையை பொறுத்தமட்டில் எதுவாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான்.

அதில், இதில் தவறினால் சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம். தற்போது விசாரணையில் உள்ளது, தற்போது தான் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கோம். பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுப்போம். அது தனி இடம், வெளியாட்கள் செய்து இருக்க முடியாது, இருந்தாலும் அது விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும். தற்போது விசாரணையில் உள்ளதால் அதுபற்றி தற்போது கூற முடியாது. நாங்குநேரியை பொறுத்தமட்டில் உடனடியாக நடவடிக்ைக எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

ஆனால் மக்கள் அதுதொடர்பாக பார்க்கும் கண்னோட்டம் மற்றும் காவல்துறை பார்க்கும் கண்ணோட்டம் என்பது, விசாரணையை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்ய முடியும். எங்களை பொறுத்தவரை 2021ம் ஆண்டை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது கொலை உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் குறைந்து இருக்கு. குறிப்பாக சாதிய கொலைகள் என்பது ஒரு வியூகம் இருக்கலாம். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு காரணம் இருக்கும். நாம் கொலைகளை கண்டுபிடிக்க வேண்டும். ரீல்ஸ் போடும் குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிஜிபி வெங்கடராமன் கூறினார்.

Tags : Tamil Nadu ,Home Secretary ,DGP ,Chennai ,Dheeraj Kumar ,
× RELATED தே.ஜ. கட்சிகள் 17ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு