×

மானாமதுரை வாலிபர் மரண வழக்கு: சிவகங்கை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 

மானாமதுரை: மானாமதுரை வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூரை சேர்ந்த அழகர்சாமி ஆகியோர் கடந்த 5ம் தேதி இரவு அரிவாளால் வெட்டப்பட்டனர்.

இது தொடர்பாக கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா (23) ஆகியோரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் ஆகாஷ் டெலிசன் தப்பி ஓட முயன்று தவறி விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மானாமதுரை தேவர் சிலை சந்திப்பில் ஆகாஷ் டெலிசனுக்காக நடத்தப்படும் போராட்டத்தை தடுக்க கோரி பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த எஸ்பி சிவபிரசாத், தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags : Manamadurai ,Sivaganga Special Division ,Jayakumar ,Alagarsamy ,Athanur ,Sivaganga district ,Krishnarajapuram… ,
× RELATED தே.ஜ. கட்சிகள் 17ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு