×

அரைகுறையாக இருப்பது ஆர்டிஐ மூலம் அம்பலம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 47% பணி மட்டுமே முடிந்துள்ளது: ஒன்றிய அமைச்சகத்தின் பதிலால் தமிழக மக்கள் ஷாக்

 

திருப்பரங்குன்றம்: மதுரை அருகே தோப்பூரில் கடந்த 2019, ஜன. 27ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2024, மே மாதம் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட பணிகள் துவங்கியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் 2026, ஜனவரியில் குறிப்பிட்டபடி பணிகள் நிறைவடையும் என கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியபடி முதல் கட்ட பணிகள் ஜனவரியில் நிறைவடையவில்லை. . இதனால், கடந்த மாதம் மதுரையில் நடைபெற இருந்த பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா என்பவர், ஆர்டிஐ மூலம் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘‘2026 ஜனவரி வரை 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. பணிகள் முடிவடைய அக்டோபர் மாதம் வரை ஆகும். இதுவரை ரூ.471 கோடி மட்டுமே நிதி அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை தோப்பூர் எய்ம்ஸ் பணிகள் முடிய மேலும் தாமதமாகும் என தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் இன்னும் கனவாகவே தொடரும் தகவல், மதுரை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

* எய்ம்சை பார்க்காமலே ஒரு பேட்ஜ் ஓவராச்சு

ஆர்டிஐ ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ல் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து தான் மே 22, 2024 அன்று கட்டுமான பணிகள் தொடங்கியது. 2 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 53 சதவீத பணிகளை முடிப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே அவசர கதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்கக் கூடாது.

கட்டுமான பணிகளை முடிப்பதற்கு போதுமான அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் தரமாக இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிலாமலேயே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்து வெளியே செல்லும் நிலை உள்ளது. வரும் நாட்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி உதவி வழங்கும் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து நிதி கிடைப்பதற்கு ஒன்றிய அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : RTI ,Madurai AIIMS ,Tamil ,Nadu ,Union Ministry ,Thiruparankundram ,Modi ,AIIMS ,Thoppur ,Madurai ,
× RELATED தே.ஜ. கட்சிகள் 17ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு