- தமிழ்நாடு அரசு
- யூனியன் அரசு
- வி.கே.சி எம்.எல்.ஏ.
- Ss பாலாஜி
- அன்புமணி
- சென்னை
- விகேசி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி
- பா.ம.க.
- வளைகுடா போர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை…
சென்னை: தமிழ்நாடு அரசை குறி வைத்து தவறான கதை கட்டுவது அன்புமணிக்கு பழக்கமாகிவிட்டது என்று விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் முதல் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகளின் உணவகங்கள் வரை அனைத்து வகையான உணவகங்களும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்து பார்க்கவே கவலையாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மிக மோசமான சமூக, பொருளாதார விளைவுகள் ஏற்படக்கூடும். அதை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி, விநியோகம் ஆகியவை ஒன்றிய அரசு பட்டியலில் 53ம் இடத்தில் இருப்பதால், அதில் மாநில அரசு அதன் அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. ஆனால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளை தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு தான் உள்ளது.
எனவே, முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சு நடத்தி தமிழ்நாட்டுக்கு வணிக எரிவாயு உருளைகளை பெறுவது, தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயு உருளைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.
உலகளாவிய பிரச்னையிலும் தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டும் விதமாக அன்புமணி பேசுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே என விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இது தமிழ்நாட்டுக்கே உரிய பிரச்னை அல்ல. உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் காஸ், பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு போகும் குழந்தைக்கும் தெரிந்த விஷயத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த அன்புமணி புரியாதது போல பேசுவது அரசியல் கேளிக்கையே தவிர வேறொன்றுமில்லை. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோலிய விஷயத்தையே தமிழ்நாடு அரசு ஏன் சரி செய்யவில்லை என்று கேட்பது என்ன நியாயம்? அப்படியானால் நாளை மழை பெய்யவில்லை என்றாலும் தமிழ்நாடு அரசையே குறை சொல்வாரா?.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏற்கனவே நிலைமையை கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டால் மாற்று ஆற்றலாக மின்சாரத்தை பயன்படுத்தும் வழிகளை ஆய்வு செய்து வருகிறது. அதற்காக கூடுதல் மின்சாரம் வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசை குறி வைத்து தவறான கதை கட்டுவது அவருக்கு பழக்கமாகிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு செய்ய வேண்டிய விஷயம் என்றாலும், அதை மாநில அரசு செய்ய வேண்டும் என்று மக்களை குழப்பியவர் இவர்தான், இப்போது அதே பழைய திரைக்கதையே மீண்டும் ஓடுகிறது.
மேலும், சமீபத்தில் காஸ் விலை உயர்ந்த போது கூட அன்புமணி ஒன்றிய அரசை நேரடியாகச் சாடாமல், ‘எண்ணெய் நிறுவனங்கள் தான் விலை உயர்த்தின’ என்று கூறுகிறார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் பெட்ரோலியத்துறை உள்ளது, ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்த்துவதாக கூறுகிறார். தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்தால் ‘மின்துறை தான் உயர்த்தியது’ என்று அரசு சொல்லிவிட்டால் அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.
உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் இவர் ஒன்றிய அரசிடம் நேரடியாக பேசி பிரச்னையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அரசை குறிவைத்து காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவது மிகவும் மோசமான அரசியல். தேசிய அளவிலான பிரச்னையை கூட ‘தமிழ்நாடு பிரச்னை’ என்று காட்டி அரசியல் லாபம் பார்க்க நினைப்பது மக்களை ஏமாற்றும் முயற்சி தான், ஆனால் இந்த பழைய நாடகம் இனிமேலும் ஓடாது. இவ்வாறு அவர் சாடினார்.
