×

வர்த்தக சிலிண்டரை தொடர்ந்து வீட்டு சமையல் எரிவாயு தட்டுப்பாடு: இல்லதரசிகள் கடும் அவதி

 

போர் காரணமாக வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஓட்டல்கள், உணவகங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் காலியானால், இன்னும் சில நாட்களில் தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள் மூடும் நிலை ஏற்படும். இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் அன்றாட வாழ்வியலில் சமையல் எரிவாயு மிக முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது. தற்போது விலையேற்றம் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் திணறி வரும் குடும்பங்களுக்கு, இது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல் அமைந்துள்ளது. மாதத்தின் தொடக்கத்திலேயே எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், பால், மளிகை மற்றும் காய்கறிச் செலவுகளைச் சுருக்க வேண்டிய நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர். போர் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு முன்பதிவுகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக திடீரென உயர்ந்தன. இதனால் ஒருவர் 21 நாட்களுக்குள் சிலிண்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என விதிமுறை இருந்தது திருத்தியமைக்கப்பட்டு 25 நாட்களாக அதனை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில், ‘‘புவிசார் அரசியல் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகளைப் பொறுத்து, மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து கொள்முதல் தொடரும் என்றும் தற்போது தட்டுப்பாடு என்பது இல்லை; இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளத்தால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’’ என்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார சிக்கல்களும், விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்களின் டீலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஓசி எண்ணெய் நிறுவனத்தின் டீலர்கள் சங்கத்தினர் கூறியதாவது: எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்தும்போது, விநியோகஸ்தர்கள் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய முன்பண தொகை அதிகரிக்கிறது. விலை உயர்வால் ஒவ்வொரு லோடு சிலிண்டருக்கும் நாங்கள் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அதற்கேற்ற லாப வரம்பு எங்களுக்கு கிடைப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் தற்போது விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது.

ஊழியர்களின் ஊதியம், வாகனப் பராமரிப்பு மற்றும் மின்சார கட்டணம் போன்ற நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட, டீலர்களுக்கான கமிஷன் தொகையை ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறோம். குறிப்பாக, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இது சந்தையில் சிலிண்டர்களுக்கான தேவையைக் குறைக்கக்கூடும் என அஞ்சுகிறோம். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு, சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எண்ணெய் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. முன்பதிவு கால இடைவெளியை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, ஒன்றிய அரசு இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* சென்னையில் ஒருநாளைக்கு 1.5 லட்சம் பேர் முன்பதிவு

* தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நுகர்வோர்கள் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 4 லட்சம் சிலிண்டர்களை மறு நிரப்பலுக்கு (ரீப்பில்) முன்பதிவு செய்கின்றனர்.

* சென்னையை பொறுத்தவரை, ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை சிலிண்டர் முன்பதிவுகள் நடைபெறுகின்றன. பண்டிகை காலங்கள் அல்லது தட்டுப்பாடு நிலவும் காலங்களில் இந்த எண்ணிக்கை 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* 2.41 கோடி வாடிக்கையாளர்கள்

* ஒன்றிய பெட்ரோலிய தகவல் அமைச்சகத்தின் தரவின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2.41 கோடி பேர் வீட்டு சிலிண்டர் உபயோக வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1.36 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றனர்.

* பிரதமரின் உஜ்வாலா யோஜனா ஏழை எளிய மக்களுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 35 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* சென்னை மண்டலத்தில் (சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள்) உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இண்டேன்’ நுகர்வோரின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகம். இது தவிர பாரத் காஸ் மற்றும் ஹெச்பி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

* ஒன்றிய அரசின் தரவுகளின்படி, சென்னையில் உள்ள அனைத்து வீடுகளும் 100 சதவீத வீடுகளில் ஏதேனும் ஒரு வகை எரிவாயு இணைப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,India ,
× RELATED புதுச்சேரியில் நள்ளிரவு கேட் ஏறி...