சென்னை: சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடந்த பிப்ரவரி 25ம் தேதி மாலை 4 மணியளவில் டெர்மினல் ஒன்றிலிருந்து புறப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த இரண்டு ஆண் பயணிகள், மது போதையில் விமான பணிப்பெண்ணிடம் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது.
அதோடு இருக்கையில் அமராமல், எழுந்து நின்று கொண்டு, விமானப் பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்து, அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. விமான பணிப்பெண்ணிடம், உனது சொந்த ஊர் எது என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளனர். அதற்கு விமான பணிப்பெண் மதுரை என்று கூறியதும், ஆண்டிப்பட்டியா, கல்லுப்பட்டியா? என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பணியின் நிமித்தம் அந்த இரண்டு பேர் இருந்த பகுதிக்கு விமான பணிப்பெண் வந்தபோது, பணிப்பெண்ணின் பின்பக்க இடது தோள்பட்டையில் கைகளை வைத்து அழுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 26ம் தேதி, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்ததும் விமான பணிப்பெண், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர்.
அதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் பிரபாகரன் (36), ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் வழக்கறிஞர் தியாகு (36) என தெரியவந்தது. இதையடுத்து, மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். மேலும், 26ம் தேதி மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
ஆனால் இருவரும் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த பிரபாகரன், தியாகு ஆகியோரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
