- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- ஓமந்தூரர் ஹாஸ்பிடல்
- ஓமந்தூரார்
- மருத்துவமனை
- தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை
- ஓமந்தூரார் அரசு தோட்டம்
சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையில் சிறப்பு உயர்திறன் மையத்தை (centre of Excellence) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இருந்து விளையாட்டுத் துறையில் இன்று உலகம் எங்கும் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்ற வண்ணம் இருந்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி துணை முதல்வர் இன்றைக்கு மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை எடுத்து விளையாட்டுத்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு அல்லது அவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு பிரத்யேக சிகிச்சைகளுக்கு என்று ஒரு அமைப்பு நிறுவப்பட்டு அது பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், ரூ.9 கோடியில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகின்ற காயங்களுக்கு தீர்வு என்கின்ற வகையில் ‘Center of excellence’ என்கின்ற வகையில் விளையாட்டு மருத்துவத்திற்கு என்று மருத்துவக்கட்டமைப்பை துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் உள்ள கிராமமாக இருந்தாலும், குக்கிராமமாக இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம் மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு இடங்களில் இதற்குரிய மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருந்தாலும் மாநில மருத்துவமனைகளில் முதன்முறையாக சிகிச்சை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் தாக்கம் அதிக்கரிக்கும்போது அதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கவிதா, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவனை முதல்வர் அரவிந்த் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், செவிலியர்கள், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
