- தேசிய பசுமை தீர்ப்பாயம்
- பள்ளிக்கரணை ஈரநிலம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- ஈரநிலம்
- தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்
சென்னை: சதுப்பு நிலம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பள்ளிக்கரணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க தடை விதித்து 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவால் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதாக கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், எந்தவித அறிவியல் பூர்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை வசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது.
