×

73வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தொண்டர்களை சந்திக்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 73வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார்.திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தனது 73வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு நாளை காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் காலை 8 மணியளவில் மலர் வளையம் வைத்து வணங்குகிறார்.

தொடர்ந்து அவர், கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் 8.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் சென்று, அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் கலைஞரின் கோபாலபுரம் இல்லம் சென்று, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். மேலும், கலைஞரின் சி.ஐ.டி. காலனி இல்லம் மற்றும் பேராசிரியர் இல்லத்துக்கு சென்று அவர்களது உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் ‘கேக்’ வெட்டி குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தொடர்ந்து காலை 9 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற உள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளை செய்வது; திமுக கொடிகளை புதுப்பிப்பது – புதிய கொடிகளை ஏற்றி வைப்பது – கிளை கழகங்களின் பெயர் பலகைகளை புதுப்பிப்பது, அண்ணா, கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்கு பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது- திமுகவின் மூத்த உறுப்பினர்களை சிறப்பிப்பது, பெருவாரியாக ரத்தத்தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்க பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாக கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்.

இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே – என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளை திட்டமிட்டு தொய்வின்றி தொடர்ந்திட வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ”ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க தொடங்கிவிட்டது. எனவே, 7வது முறையும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும். அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து. ஆடம்பரத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர். இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சென்னைக்கு இன்று காலை முதல் வர தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கானோர் சென்னை அண்ணா அறிவாலயம் வர உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொருவராக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். மேலும், சுமார் ஒரு மாத காலத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Tags : K. Stalin ,Chennai ,Mudhalvar Mu. K. Stalin ,Anna Vidyalaya ,Thimuka Phalakum ,First Minister ,
× RELATED காக்கிநாடாவில் கோர விபத்து: பட்டாசு...