மதுரை:தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நாளை (மார்ச் 1) மாலை, மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பேசுகிறார். இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இங்கு கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். மதுரை தேஜ கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை பிற்பகல் 2.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை தேஜ கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இதில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேஜ கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரி;
இதேபோல் புதுச்சோியில் நாளை மதியம் லாஸ்பேட்டை அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரை சந்திக்க ராமதாஸ் முடிவு?
பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் நிலையில் அவரை பாமக நிறுவனர் ராமதாஸ், நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளைய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு;
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மதுரையில் இன்று இரவு அதிமுக-பாஜ இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜ தேர்தல் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலுடன் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. இதில் தொகுதி உடன்பாடு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
