×

காவேரிப்பட்டணத்தில் கால்நடை தீவன சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

காவேரிப்பட்டணம், பிப்.28: காவேரிப்பட்டணத்தில் நெல் சாகுபடியில் வருவாய் குறைந்ததால், கால்நடை தீவனம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காவேரிப்பட்டணத்தில் கடந்த சில ஆண்டுகளாக நெல் விளைச்சல் குறைந்து வருகிறது. நெல் சாகுபடியில் எதிர்பார்த்த அளவில் வருவாய் கிடைக்காததால், பலர் மாற்று பயிர்களான பணப்பயிர்களைத் தேர்வு செய்து பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மல்லிகை, கரும்பு போன்ற பயிர்களுக்கு மாறும் நிலை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, கால்நடைகளுக்கு தேவையான பச்சை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்கும் வகையில், விவசாயிகள் தங்களது நிலங்களில் குபா புல் உள்ளிட்ட கால்நடை தீவன பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த அளவு நீர் போதுமானதால், வறட்சியையும் சமாளித்து இப்பயிர்கள் செழிப்பாக வளர்கின்றன. இந்த தீவன பயிர்களை, பசு மாடுகளுக்கு வழங்குவதன் மூலம் பால் சுரப்பு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வெளியில் இருந்து தீவனம் வாங்கும் செலவும் குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அதே நேரத்தில், தீவன பயிர்களை அறிவியல் முறையில் பராமரித்து வளர்ப்பது குறித்து, வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீவன பயிர் சாகுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடையே, ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Cauverypatnam ,
× RELATED பாறை இடுக்கில் தவறி விழுந்த பள்ளி மாணவன்