×

‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி: ஜூலை 14 வரை அமலில் இருக்கும் என தகவல்

 

 

வேலூர்: ரயில் ஒன் செயலியில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3 சதவீத கட்டண தள்ளுபடி வரும் ஜூலை 14ம்தேதி வரை அமலில் இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியன் ரயில்வே நிர்வாகம், அனைத்துவித சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் மொபைல் செயலியாக ‘ரயில் ஒன்’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள், முன்பதிவு டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. மேலும் ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு, என்டிஇஎஸ், மொபைல் யுடிஎஸ், ரயில் மற்றும் பாதையில் உணவு வழங்குதல் போன்ற பல ஒருங்கிணைந்த சேவைகளையும் வழங்குகிறது.

இந்த ரயில் ஒன் செயலியில் நேரடி ரயில் இயக்க நிலை, தாமதங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வருகை, புறப்பாடு நேரங்கள், பிளாட்ஃபார்ம் தகவல், பெட்டி நிலை போன்றவற்றை பயணிகள் எளிதாக அறிந்து கொள்ள உதவுகிறது. முன்பதிவு டிக்கெட் இருக்கை உறுதி ஆர்ஏசி, காத்திருப்பு பட்டியல் நிலைகளை கண்காணிக்கலாம். டிக்கெட் ரத்து செய்தல்களை நிர்வகிக்கலாம். பணத்தை திரும்பப் பெறும் நிலையை கண்காணிக்கும் வசதி உள்ளது. டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், ரயில் ஒன் செயலியில் உள்ள அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் 3 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் பலனை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில்ஒன் செயலி தளத்தில் யூபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் கட்டண விருப்பங்களை பயன்படுத்தி செய்யப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் முன்பதிவுகளுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆர்-வாலட் மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, தற்போதுள்ள 3 சதவீத போனஸ் கேஷ் பேக் முறை எந்த மாற்றமும் இல்லாமல் தொடருகிறது. இந்த முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கான 3 சதவீத தள்ளுபடி வரும் ஜூலை 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயணிகள், ரயில்ஒன் செயலியைப் பயன்படுத்தி, தடையற்ற டிஜிட்டல் டிக்கெட்டின் பலன்களைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். தெற்கு ரயில்வே நிர்வாகம், மொபைல் பயன்பாடுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் முன்பதிவுகளில் 29.5 சதவீதத்தை அடைந்துள்ளது. இது மற்ற ரயில்வே மண்டலங்களை விட சிறப்பான செயல்பாடாக அமைந்துள்ளது. இதனால், ரயில் ஒன் செயலியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Vellore ,administration ,Indian Railways Administration ,
× RELATED களக்காடு அருகே பதற்றம்:...