- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை
- சென்னை
- சேப்பாக்கம்-
- திருவல்லிக்கேணி சட்டமன்றம்
- பேகம் 5வது தெரு
- மத்திய சென்னை
சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.13 கோடியில் முடிவுற்ற 3 திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேகம் 5வது தெருவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாமன்ற உறுப்பினர் கமலா செழியனின் வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.10 கோடியில் 2,250 சதுரஅடி பரப்பளவு கொண்ட இறகுப் பந்து விளையாட்டு உள்ளரங்க மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜாஜி நகர், கஜபதி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, ராஜேஷ்குமார் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.4.44 கோடி மதிப்பீட்டில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மாளிகையானது தரைத் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளத்துடன் 3,264 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த திருமண மண்டபத்தின் தரைத் தளத்தில் வாகன நிறுத்தம், முதல் தளத்தில் சமையலறை மற்றும் உணவு அருந்தும் கூடம், இரண்டாம் தளத்தில் திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில் மணமகன், மணமகள் தங்கும் அறைகள், குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ண தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வில்சன் மேம்பாட்டு நிதி, சிங்கார சென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.10.59 கோடி மதிப்பீட்டில் கலைஞர் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபம் 19,610 சதுர அடி பரப்பளவில் தரைத் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களை கொண்டது. இந்த திருமண மண்டபத்தின் தரைத் தளத்தில் வாகனம் நிறத்துமிடம், முதல் தளத்தில் 150 பேர் அமர்ந்து உணவருந்தும் கூடம், இரண்டாம் தளத்தில் 350 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் திருமண மண்டபம், மூன்றாம் தளத்தில் 4 விருந்தினர் அறைகள், திருமண மண்டபத்திற்கு குளிருட்டும் வசதி, மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆதிகேசவலு தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்படவுள்ளது. இந்த புதிய பள்ளிக் கட்டிடமானது தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் 874.34 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த பள்ளிக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் 3 வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, 2 சமையல் அறைகள், 2 வைப்பு அறைகள், கழிவறைகள், முதல் தளத்தில் 6 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. திருவல்லிக்கேணி பேகம் 5வது தெருவில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு உள்ளரங்க மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், ராஜாஜி நகரில் ரூ.4.44 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் திருமண மாளிகை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண தெருவில் ரூ.10.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார். சிவராஜபுரத்தைச் சேர்ந்த உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்ட சண்முகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வலது கால் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிநவீன எடைகுறைவான செயற்கை காலை பொருத்தினார்.
சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவலு தெருவில் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சென்னை நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிகளில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவர் பணிகள் சிற்றரசு, ஆளுங்கட்சி துணைத் தலைவர் காமராஜ், மண்டலக்குழுத் தலைவர் மதன்மோகன், வட்டார துணை ஆணையர்கள் கட்டா ரவி தேஜா, கவுசிக், மாமன்ற உறுப்பினர்கள் கமலா செழியன், மங்கை ராஜ்குமார் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
