×

திண்டுக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்: மார்ச் 10ல் பூக்குழி இறங்கும் வைபவம்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல் வைபவம் மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் உருவம் பொறித்த கொடி கோயிலைச் சுற்றி வலம் வந்து கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த திருவிழா மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் நாளை (பிப்.24) அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்திற்கு சென்று, அங்கு புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் சந்தனக் கருப்பு சுவாமி கோயிலில் ஒன்று கூடுவர். பின் அங்கிருந்து மாரியம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க, வண்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து, பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்குவர்.

பிப்.27ம் தேதி மயில் வாகனம், மார்ச் 3ல் சிம்ம வாகனம், 6ல் அன்ன வாகனம் என பல்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வருதல், மார்ச் 8ல் பால்குடம் எடுத்தல், 9ல் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 10ம் தேதி அதிகாலை அக்னிச்சட்டி எடுத்தல், காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றுதலும், பிற்பகலில் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறுதலும், தொடர்ந்து பூக்குழி இறங்குதல் வைபவமும் நடைபெறுகிறது. மார்ச் 11ம் தேதி காலை அம்மன் மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. இரவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி நகர் வலம் வருதல் நடைபெறுகிறது.

இதனுடன் விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன், திருக்கோயில் பரம்பரை பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், யுவராஜ், தினேஷ்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா வழிகாட்டுதல்படி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தலைமையில், தூய்மைப்பணி ஆய்வாளர் செல்வி சித்ராமேரி, பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Masi festival ,Natham Mariamman temple ,Dindigul district ,Pookkuzhi ,Natham ,Agnichatti ,Mariamman temple ,Natham, Dindigul district ,
× RELATED கடந்த 5 ஆண்டுகளில்...