×

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை

*பொதுமக்கள் வலியுறுத்தல்

தர்மபுரி : தர்மபுரி குமாரசாமிபேட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி அசுத்தமாக காணப்படும் நிலையில், சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி- பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை பகுதியில் ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த மேம்பாலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், விபத்து அபாயம் இன்றி பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இந்த மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள தண்டவாளத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

இது பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு உகந்த வகையில் பராமரிக்கப்படவில்லை. இதனால், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது. மேலும், மதுஅருந்தும் இடமாகவும் சுரங்கப்பாதை மாறியுள்ளது.

தற்போது, தர்மபுரியில் புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்திற்கு இந்த மேம்பாலம் வழியாக செல்லும் பஸ்கள், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால், மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சமாளிக்க இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை பயன்பாடு இல்லாமல், கழிவுநீர் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது.

அதை சீர்படுத்தி டூவிலர் மற்றும் மாணவர்கள் நடந்து செல்லும் வகையில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ரயில்வே மேம்பாலம் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்து சிரமப்படுவது தவிர்க்கப்படும்.

புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இந்த சுரங்கப்பாதை பெரும் உதவியாக இருக்கும். தற்போது உள்ள நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, இந்த சுரங்கப்பாதையை சுத்தம் செய்து அகலப்படுத்தி டூவிலர் மற்றும் மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், ரயில்வே துறையும் இணைந்து எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Dharmapuri Kumarasamypettai ,Dharmapuri ,Kumarasamypettai ,Dharmapuri-Pennagaram road ,
× RELATED ஊட்டி கால்ப்லிங்ஸ் சாலையில் கனரக...