×

ஆழியார் கால்வாயில் மூழ்கி தத்தளித்த கடமான் பலி

*வனத்துறையினர் முயற்சி வீணானது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியார் கால்வாய் தவறி விழுந்து தத்தளித்த கடமான் பரிதாபமாக உயிரிழந்தது.பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியிலிருந்து, வெயிலின் தாக்கத்தால் இரைதேடி யானை, வரையாடு மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.

அதிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ஆழியார் அணை, கவியருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு வனவிலங்குகள் அடிக்கடி உலா வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து ஆழியார் நோக்கி கடமான் ஒன்று வந்தது.

அந்த மான் ஆழியார் அணை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது.அதனை கண்ட சுற்றுலா பயணிகள் மானை பார்த்து ரசித்ததுடன், சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சுற்றுலா பயணிகளை கண்டு மிரண்ட மான் மீண்டும் வனப்பகுதி நோக்கி விரைந்து செல்ல முயன்றது. அப்போது, திடீரென அருகே இருந்த கால்வாயில் தவறி விழுந்துள்ளது.

இதனை கண்ட சுற்றுலா பயணிகள் சிலர் அதனை காப்பாற்ற முயன்றனர். சுமார் 5 அடி ஆழ தண்ணீரில் மான் தத்தளித்து கொண்டிருந்தது. அதன்பின், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், கடமானை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு அதனை கரை சேர்த்தனர்.ஆனாலும், 6 வயதான ஆண் கடமான் சிறிது நேரத்தில் இறந்தது. தண்ணீரில் தத்தளித்தபோது அதிக தண்ணீர் குடித்ததால் மான் இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Aliyar canal ,Pollachi ,Pollachi.… ,
× RELATED ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும்...