×

வரலாற்று சிறப்புமிக்க வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெரு பகுதியில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை அருள்மிகு இரவீஸ்வரர் கோயில் சோழர் காலத்து கட்டிடக்கலைக்கும் ஆன்மீக சிறப்புகளுக்கும் சான்றாக விளங்கி வருகிறது. இந்த கோயில் சாலையில் இருந்து சுமார் 5 அடிக்கு கீழ் தாழ்ந்து இருந்த காரணத்தினால் சூரிய ஒளி கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது படும் அரிய நிகழ்வு சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இதனால் கோயிலை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜாக்கி மூலம் உயர்த்தவேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்களின் ஒத்துழைப்புடன் நவீன தொழில்நுட்பத்தில் கோயிலை உயர்த்தும் பணிகள் கடந்த ஒன்றரைஆண்டுகளாக நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல்முறையாக 11.2 அடிக்கு தரை தளத்தில் இருந்து கோயிலை உயர்த்தும் பணிகள் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் முடிவடைந்தன.

இதையடுத்து இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 16ம்தேதி திங்கட்கிழமை கணபதி பிரார்த்தனையுடன் மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. கோ பூஜை, மகா கணபதி ஹோமம், தனபூஜை நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை 2ம் கால பூஜை மற்றும் 3ம் கால பூஜை நடைபெற்று சனிக்கிழமை ஐந்தாம் கால பூஜை நடைபெற்றது.இன்று காலை கலச புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் பிரசாத பை வழங்கப்பட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்று மாலை திருக்கல்யாண உற்சவமும் பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தில் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி, மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் புவனேஸ்வரி, செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், உபயதாரர்கள் தர்மலிங்கம், ராணி சங்குபதி, அபிராமி ராமநாதன் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவின்படி, எம்கேபி.நகர் உதவி கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : Vyasarpadi Iraveeswarar Temple ,Perambur ,Arulmigu Marakathambal Udanurai Arulmigu Iraveeswarar Temple ,Vyasarpadi Moorthingar Street ,Chennai ,
× RELATED முடிமாற்று அறுவை சிகிச்சை குறித்து...