×

அமெரிக்கா வரி செலுத்தாது இந்தியா தான் அமெரிக்காவுக்கு வரி செலுத்தும்: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், ‘இனி இந்தியா தான் வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது’ என கூறி உள்ளார். மேலும், பரஸ்பர வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து உலக நாடுகளுக்கும் புதிதாக 15 சதவீத தற்காலிக வரியை அவர் விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவசரகால அதிகார சட்டங்களின் கீழ், உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதித்த பரஸ்பர வரி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. உலக நாடுகள் மீது விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் ரத்து செய்யப்படும் என உலக நாடுகள் நிம்மதி அடைந்தன.

இந்நிலையில், அனைத்து உலக நாடுகள் மீதும் புதிதாக 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை நேற்று காலை அறிவித்த டிரம்ப், மாலையில் அதை 15 சதவீதமாக அதிகரித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் அதற்கான பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதில், ‘அடிப்படை சர்வதேச கட்டண சிக்கல்களைத் தீர்க்கவும், அமெரிக்க தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வர்த்தக உறவுகளை மறுசீரமைக்க நிர்வாகத்தின் பணியைத் தொடரவும் உலக நாடுகளுக்கு 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் அறிவிப்பின்படி, 15 சதவீத தற்காலிக இறக்குமதி வரி வரும் 24ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வரும். 150 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்தியாவை பொறுத்த வரை, 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபாராதமாக 25 சதவீத வரியையும் அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டில் விதித்தது. இதன்பின், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, 25 சதவீத அபராதத்தை ரத்து செய்தது.

மேலும் இந்தியா மீதான பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்க ஒப்புக் கொண்டு சமீபத்தில் இரு நாடுகளும் இருதரப்பு வரைவு வர்த்தக ஒப்பந்த அறிக்கையை வெளியிட்டன. விரைவில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்தியாவுக்கு எதிரான வரி முழுமையாக நீக்கப்படும் என்றும் அதன் தாக்கம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து, வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், ‘‘நீதிமன்ற தீர்ப்பால் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. எதுவும் மாறாது. இனி இந்தியா வரிகளை செலுத்தும், நாங்கள் எந்த வரியும் செலுத்த மாட்டோம். இது இதற்கு முன்பு இருந்ததற்கு நேர்மாறானது. இந்த ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும்’’ என கூறி உள்ளார்.

மேலும், தனக்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக சாடிய அதிபர் டிரம்ப், ‘‘உச்ச நீதிமன்றத்தின் வரிகள் தொடர்பான தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நீதிமன்றத்தின் சில உறுப்பினர்களுக்கு நமது நாட்டிற்கு சரியானதை செய்ய தைரியம் இல்லாததற்காக முற்றிலும் வெட்கப்படுகிறேன். சரியான முட்டாள்களாகவும் அடிவருடிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களின் முடிவு தவறானது. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் எங்களிடம் மிகவும் சக்திவாய்ந்த மாற்று வழிகள் இருக்கின்றன’’ என்றார்.

* மோடி மீண்டும் சரணடைவார்
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எதுவும் மாறாது என அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகி விட்டது. அவர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் சரணடைவார். பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு சோகமானதாக மாறி விட்டது’’ என கூறி உள்ளார்.

* 11 விமானத்தில் இருந்து 10 விமானமாக சரிந்தது
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை நேற்றைய பேட்டியிலும் குறிப்பிட்டார். 200 சதவீத வரி விதிப்பதாக இந்தியா-பாகிஸ்தானை மிரட்டி வழிக்கு கொண்டு வந்ததாக மீண்டும் அவர் கூறினார். ஆனால் இரு தினங்களுக்கு முன் இந்தியா-பாகிஸ்தான் போரில் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறிய நிலையில் நேற்றைய பேட்டியில் 10 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறினார்.

கடந்த ஓராண்டில் அவர் இந்த விமானங்களின் எண்ணிக்கையை அடிக்கடி மாற்றி வருகிறார். ஆரம்பத்தில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறிய டிரம்ப், கடந்த ஆகஸ்டில் 7 என்றும், நவம்பரில் 8 என்றும் இரு தினங்களுக்கு முன் 11 என்றும் இப்போது 10 என்றும் கூறி உள்ளார்.

* இதுவரை வசூலித்த ரூ.12 லட்சம் கோடி என்னவாகும்?
அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் மூலம் இதுவரை சுமார் 133 பில்லியன் டாலர் (ரூ.12 லட்சம் கோடி) வரி வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது பரஸ்பர வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தொகையை நிறுவனங்களுக்கு திருப்பித் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்க கருவூலத்தில் இருந்து நிறுவனங்களுக்கு தாமாக திருப்பிப் தரப்படுமா, இல்லாவிட்டால் இந்த தொகையை கேட்டு நிறுவனங்கள் மீண்டும் நீதிமன்ற கதவை தட்டுமா என்பது விரைவில் தெரியவரும்.

* வரி விதிப்பில் இதுவரை நடந்தவை
* பிப். 13, 2025: வரி பதற்றங்களுக்கு மத்தியில், 2030ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலராக இருதரப்பு வர்த்தகத்தை உயர்த்த பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டனர்.
* மார்ச் 4-6, 2025: வரி உயர்த்துவதை தடுக்க, வர்த்தக பிரச்னைகள் குறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்று அந்நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
* ஏப். 2, 2025: இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதலாக 16% பரஸ்பர வரியும், 10% சதவீத அடிப்படை வரியும் என மொத்தம் 26 சதவீத வரி அறிவிக்கப்பட்டது.
* ஏப். 9, 2025: பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
* ஜூன் 26, 2025: இந்திய குழு வாஷிங்டனுக்கு விரைந்து 90 நாள் கெடுவுக்கு முன்பாக ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்தது.
* ஜூலை 31, 2025: இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி அறிவிக்கப்பட்டது. அது ஆகஸ்ட் 7ம் தேதி அமலுக்கு வரும் என உறுதி செய்யப்பட்டது.
* ஆகஸ்ட் 6, 2025: ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் 25 சதவீத வரி அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் வரி 50 சதவீதமாக அதிகரித்தது.
* பிப். 2, 2026: இந்தியா, அமெரிக்கா இடையே நடந்த நீண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனால் பரஸ்பர வரி 25ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. 25 சதவீத அபராதம் வரி ரத்து செய்யப்பட்டது. பதிலுக்கு அமெரிக் பொருட்களுக்கு இந்தியா பூஜ்ஜிய வரி விதிப்புக்கு ஒப்புக் கொண்டது.
* பிப். 20, 2026: பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் 15 சதவீத தற்காலிக வரியை டிரம்ப் அறிவித்தார்.

* இனி வரி எப்படியிருக்கும்?
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான வரிகள் 15 சதவீதமாக இருக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் தற்போதுள்ள எம்எப்என் அல்லது இறக்குமதி வரிகளுடன் கூடுதலாக 15 சதவீத வரி மட்டுமே இந்திய பொருட்களுக்்கு இனி இருக்கும்.

உதாரணமாக ஒரு தயாரிப்பு 5 சதவீத எம்எப்என் வரி கொண்டிருந்தால் அத்துடன் 15 சதவீத புதிய வரி உட்பட மொத்த வரி 20 சதவீதமாக இருக்கும். முன்பு இது 5+25 சதவீதமாக இருந்தது’’ என்றார். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பரஸ்பர வரியை டிரம்ப் அறிவித்தார். தற்போது அவை அனைத்தும் ரத்தாகி இருப்பதால், ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் ஒரே மாதிரியாக புதிய 15 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் என அரசு அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பரஸ்பர வரி விதிப்புக்கு முன்பு எம்எப்என் வரி நடைமுறையில் இருந்தது. இனி எம்எப்என் வரியுடன் கூடுதலாக 15 சதவீத வரி விதிக்கப்படும். குறிப்பிட்ட துறைகளுக்கான வரிகள், அதாவது இரும்பு, அலுமினியம், காப்பர் மீதான வரி 50 சதவீதமாகவும் சில வாகன உதிரிபாகங்களுக்கான வரி 25 சதவீதமாகவும் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

* 150 நாட்களுக்கு பிறகு என்னவாகும்?
உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத தற்காலிக இறக்குமதி வரி 150 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதன்பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது எவ்வளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

* வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் இருக்குமா?
ஜிடிஆர்ஐ நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதியின் மதிப்பில் 55 சதவீத பொருட்களுக்கு மட்டுமே பரஸ்பர வரிகள் பொருந்தும். சுமார் 40 சதவீத பொருட்கள் விலக்கு அளிக்கப்பட்ட வகைகளில் உள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மறுமதிப்பீடு செய்ய வேண்டும்’’ என்றார். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்திய குழு நாளை அமெரிக்கா செல்கிறது. இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகும் என்றும், வரும் ஏப்ரலில் அமலுக்கு வரும் என்றும் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

* ஒன்றிய அரசு மவுனம்
இது குறித்து ஒன்றிய வர்த்தக அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்துள்ளோம். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பும் செய்தியாளர்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அமெரிக்க நிர்வாகத்தால் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் அவற்றின் தாக்கங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்’ என கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என டிரம்ப் கூறியது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

Tags : United States ,India ,President Trump ,Washington ,President ,Trump ,US Supreme Court ,
× RELATED இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18%ல்...