செங்கல்பட்டு: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையிலான 44 புறநகர் மின்சார ரயில் சேவைகள் நேற்று முதல் 45 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, புறநகர் ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11வது நடைமேடைகளில் வழக்கமாக புறநகர் மின்சார ரயில்கள், நேற்று நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் 5ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை (நாட்கள்) 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே தகவல்கள் கூறுகின்றன.
இதனால் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் நேற்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு பாதையான 6வது நடைமேடை வழியாக இயக்கப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் வரும் அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் இதே காலகட்டத்தில் எழும்பூர் ரயில்நிலையத்தில் விரைவு பாதையான 5வது நடைமேடை வழியாக இயக்கப்படும். இதையடுத்து, சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, திருத்தப்பட்ட நேரங்களில் புதிய மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
இந்த 45 நாட்களில் மேற்கண்ட புறநகர் ரயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தனி நேர அட்டவணை கிடையாது என்று தென்னக ரயில்வே குறிப்பிட்டுள்ளது. இதனால் புறநகர் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் இம்மாதத்துக்கான ரயில்வே மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி வைத்துள்ளனர். எனினும், அவர்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த முடியாமல், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை, குறிப்பிட்ட நேரத்துக்குள் மாநகர மற்றும் அரசு பேருந்துகளில் சென்று வருவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, தங்களின் மாதாந்திர ரயில்வே சீசன் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
