×

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்வதற்கு ஏற்ற இடமான செட்டிகுளம் கடற்கரை சுற்றுலா தலம் ஆக்கப்படுமா?

* இயற்கை கொடுத்த வரத்தை பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

* தொழில் வளர்ச்சி பெருகும் என்பதால் உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு

கூடங்குளம் : இயற்கை கொடுத்த வரப்பிரசாதமாக அமைந்துள்ள செட்டிகுளம் கடற்கரையை சுற்றுலாதலமாக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொழில் வளர்ச்சி பெருகும் என்பதால் உள்ளூர் மக்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் கிராமம் கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி சுமார் 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

அழகிய கடற்கரை கிரமமான செட்டிகுளம் இயற்கையாகவே கடலோடு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு அழகிய மணற்பரப்புடன் விரிந்து பரந்து கிடக்கிறது.

பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் தாராளமாக வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளுடன் அழகாக இயற்கை தந்த கொடையாக இக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கடற்கரை பகுதியில் கடல் ஆழமில்லாமல் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது கூட, எந்தவொரு தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு கடற்கரை என்றால் அது நெல்லை மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கடற்கரை மட்டுமே ஆகும்.

எனவே தான் இந்த கடற்கரை பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி சுற்றுலா வருவதற்கும், நீராடி மகிழ்வதற்கும் பாதுகாப்பான கடலாக அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் பொங்கல், தீபாவளி மற்றும் கிறிஸ்மஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வந்து அழகியமணற்பரப்பில் அமர்ந்து, கடலில் நீராடி விட்டு செல்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய இந்த கடற்கரை அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமின்றி வந்து செல்ல முடியும்.

எனவே, இந்த கடற்கரையை அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலாதலமாக உருவாக்கினால், புதுச்சேரி, கேரளாவை போன்று இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் தொழில் வளர்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார் கூறுகையில், ‘செட்டிகுளம் கடற்கரையை சுற்றுலா தலமாக வேண்டும் என்பது இப்பகுதி மக்களுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது. நான் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.

இதற்காக செட்டிகுளம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு செட்டிகுளம் கடற்கரையில் அடிப்படை வசதிகளை செய்து தந்து சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

விவேகானந்தர் பாறையை ரசித்து பார்க்கலாம்:

இயற்கையின் கொடையாக அமைந்துள்ள செட்டிகுளம் கடற்கரைக்கு இப்பகுதியை சுற்றியுள்ளவர்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் இரவில் பார்த்து ரசிக்கலாம்.

Tags : Chettikulam beach ,Kudankulam ,
× RELATED கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.245 கோடி பயிர்க்கடன் வழங்கல்