- ஆதிமருபட்டி
- குலையங்கரிசல்
- Spiknagar
- தூத்துக்குடி மாநகராட்சி
- பொட்டல்காடு
- முள்ளக்காடு அரசு
- பொட்டல்காடு…
ஸ்பிக்நகர் : தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அத்திமரப்பட்டி முதல் முள்ளக்காடு கிராமத்திற்குட்பட்ட பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் உப்பளத்தொழில் செய்து வருகின்றனர். அத்திமரப்பட்டி ஊரின் தெற்கு பகுதியில் இருந்து பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல் செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி கிராம மக்கள், தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கு தூத்துக்குடிக்குத் தான் சென்று வருகின்றனர். மேலும் இங்கிருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இச்சாலை வழியாகத்தான் தினசரி சென்று திரும்புகின்றனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து சாயர்புரம் மற்றும் கட்டாலங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாக பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இச்சாலை பல வருடங்களாக பராமரிப்பின்றி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று பல்லாங்குழி போல காட்சியளிக்கிறது. மேலும் மண் சாலையாகவும் மாறியுள்ளது. இதனால் இப்பகுதி கிராம மக்களின் போக்குவரத்துக்கு பெரும் சிரமமாகவே உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்க்காக ஜேசிபி இயந்திரம் மூலம் சாலைகள் பெயர்க்கப்பட்டது.
அதன்பிறகு எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதி பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கூறுகையில், கூட்டாம்புளி, செபத்தையாபுரம், போடம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி போன்ற நகர பகுதிகளுக்கு சென்று வர குலையன்கரிசல், பொட்டல்காடு வழியாக சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளது. இதனால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது சிரமமாகவே உள்ளது. இதனை சீரமைத்து கொடுத்தால் போக்குவரத்துக்கு லாவகமாக இருக்கும், என்றனர்.
