சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் தேர்தல் பணியை பார்த்து பொறாமைப்பட்டு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கைச் சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும் என்று அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் கே.என்.நேரு மீது சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருந்த போது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனை தொடர்ந்து அமைச்சர் சிபிஐ வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.என்.நேருவை கட்சியின் மூத்த தலைவர் என்றோ, கட்சியின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல. திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர் தான் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு. பாஜ அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துகிறது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2016ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை.
இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதல்வர் மற்றும் திமுகவின் இமேஜை கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள். அமைச்சர் கே.என்.நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்து பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர் கே.என்.நேரு இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார். தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.
