×

கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் ரோஜாப் பூங்கா: செடிகளில் கவாத்து பணி தொடக்கம்

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை சீசனுக்கு தயாராகும் வகையில் ரோஜாப் பூங்காவில் உள்ள செடிகளில் கவாத்து பணிகள் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அப்சர்வேட்டரி சாலையில் பிரசித்தி பெற்ற ரோஜாப் பூங்கா அமைந்துள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா தோட்டக்கலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு 500 வகைகளுடன் 16,000 ரோஜாச் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் ரோஜாப் பூங்காவை விரும்பிப் பார்ப்பர். இந்நிலையில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதையொட்டி பூங்காவில் உள்ள ரோஜாச் செடிகளில் கவாத்து செய்து உரமிடும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பணியினை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர்கள் ஸ்வர்ணலதா, பிரபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். கவாத்து செய்த ரோஜாச் செடிகள் சேதம் அடையா வண்ணம், வெட்டப்பட்ட இடங்களில் கார்பன் ஆக்சைடு குளோரைடு என்ற பூஞ்சானக் கொல்லி தடவப்படுகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து கவாத்து செய்த ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கும். மே மாதம் முழுமையாக பூத்துக் குலுங்கும். கவாத்து பணி இன்னும் 25 நாட்கள் நீடிக்கும். இதையடுத்து கோடை சீசனுக்கு தயாராகும். இதற்காக கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை அலுவலர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

 

Tags : Kodaikanal ,Kawatu ,Rose Garden ,Rose Park ,Observatory Road ,Godaikanal, Dindigul district ,
× RELATED தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான்...