டெல்லி: தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணமல்ல என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2022ல் கட்டாய மதமாற்றத்தால் 12ம் வகுப்பு மாணவி லாவண்யா தற்கொலை செய்ததாக பாஜக குற்றம்சாட்டி இருந்தது.
சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில்; “தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை. மாணவி பேசிய எந்தவொரு காணொலியிலும் மதமாற்றம் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பள்ளியில் படித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், யாரும் மதம் மாறவில்லை.
லாவண்யாவின் தந்தை, சித்தி ஆகியோர் பாஜக தலைவர்களின் நிர்பந்தத்தால் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாணவி மரணத்திற்கு காரணமான விடுதிக் காப்பாளர் சகாய மேரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு 12ம் வகுப்பு மாணவி லாவண்யா தற்கொலை செய்தபோது, அது கட்டாய மதமாற்றத்தால் நிகழ்ந்தது என அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். நீண்ட நாட்களாக நீடித்த மதமாற்றக் குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
