×

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் 9 நீதிபதி அமர்வு ஏப். 7 முதல் விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவிப்பு

புதுடெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசித்திபெற்ற ஆன்மீக தலமாக திகழ்கிறது. இங்கு 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. இது காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வரலாற்று ஐதீகமாகும். இதில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்கு 1991ல் கேரள உயர்நீதிமன்றமும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு சீராய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,\\”அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான வழக்குகளை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை விசாரணை நடத்தப்படும். அதில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான வாதங்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரையும், ஆதரவு தெரிவிப்பவர்கள் சார்பில் ஏப்ரல் 14 முதல் 16 வரையும் வாதங்கள் கேட்கப்படும்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளில் இறுதி வாதம் நடைபெறும். குறிப்பாக ஏற்கனவே சபரிமலை வழக்கில் முடிவு செய்யப்பட்ட ஏழு அம்சங்கள் மீது விசாரணை நடத்தப்படும். இதில் மனுதாரர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதில் சபரிமலை மட்டுமில்லாமல் பிற மதங்கள் தொடர்பான விவகாரங்கள் தொடர்பான வழக்குகளும் சேர்த்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வர் வழக்குகளை ஒருங்கிணைத்து நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

சபரிமலை வழக்கின் ஏழு அம்சங்கள்
1. அரசியலமைப்பு வழங்கும் மத சுதந்திரத்தின் எல்லை என்பது எவ்வளவு ?
2. தனிநபர் மத உரிமை சட்டப்பிரிவு 25க்கும், ஒரு மதப் பிரிவின் கூட்டு உரிமை சட்டம் 26க்கும் என்ன விதமாக தொடர்பு உள்ளது.
3. மதப் பிரிவுகளின் உரிமைகள், அரசியலமைப்பின் மூன்றாவது பகுதியில் உள்ள மற்ற அடிப்படை உரிமைகளுக்கு இந்த விவகாரம் என்பது உட்பட்டதா ?
4. மத வழிபாடுகள் விவகாரத்தில் இருக்கும் ஒழுக்கம்’ என்ற சொல்லின் அர்த்தம் என்ன?. அது அரசியலமைப்பு விதிகளுக்குள் உட்பட்டதா ?
5. மத அமைப்புகளுக்கு அடிப்படை உரிமைகள் உண்டா ?
6. சட்டப்பிரிவு 25(2)(பி)ன் கீழ் வரும் ‘‘இந்துக்களின் ஒரு பிரிவு” என்பதன் பொருள் என்ன ?
7. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சாராத ஒருவர், அந்த மதத்தின் நடைமுறைகளை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியுமா? ஆகிய கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags : Sabarimala ,Supreme Court ,Chief Justice ,Suryakanth ,New Delhi ,Sabarimala Ayyappa temple ,Kerala ,
× RELATED தேசப் பாதுகாப்பில் அரசியல் வேண்டாம்:...