1809ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த அந்தக் குழந்தை லூயிஸ் பிரெயில் தந்தையின் பட்டறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கூர்மையான கருவியால் கண் காயம் அடைந்தது. மூன்று வயதில் ஒரு கண்ணையும், ஐந்து வயதில் முழுப் பார்வையையும் இழந்தது. ஆனால், அந்த இழப்பே அவனது பார்வையை உலகம் முழுவதும் விரிய வைத்தது. துன்பத்தில் துவண்டு போகவில்லை அந்தக் குடும்பம். பார்வையற்றோருக்கான ஒரே பள்ளியில் அந்தக் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு கற்றுக் கொடுக்கப்பட்ட கல்விமுறை அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. “இது போதாது” என்ற உள்ளுர் குரல் அவனை இடைவிடாது தொந்தரவு செய்தது.
பதினைந்து வயதிலேயே, “பார்வையற்றோர் பிறரின் இரக்கத்தில் அல்ல, தங்கள் அறிவின் பலத்தில் வாழ வேண்டும்” என்ற தீர்மானத்துடன் அவர் ஆராய்ச்சியில் இறங்கினார். இரவும் பகலும், சிந்தனையும் முயற்சியும் இணைந்து, ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய எழுத்து முறை உருவானது. அந்த ஆறு புள்ளிகள் மொழியாக மாறின; அறிவாக மாறின; வாழ்க்கையாக மாறின. இலக்கியம், கணிதம், அறிவியல், இசை என எல்லாம் அந்த புள்ளிகளுக்குள் அடங்கின.
ஆரம்பத்தில் அந்தக் கண்டுபிடிப்பு நிராகரிக்கப்பட்டது. அவமதிப்பும், அலட்சியமும் சந்தித்தது. ஆனால், அவர் நின்றுவிடவில்லை. தொடர்ந்து உழைத்தார். இறுதியில், உலகம் ஏற்றுக் கொண்டது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் அந்த முறை பயன்படுத்தப்படுகிறது. கோடிக்கணக்கான பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு அது கண்களாக மாறியுள்ளது. மருத்துவர், வழக்கறிஞர், பேராசிரியர், நிர்வாகி-எல்லாத் துறைகளிலும் அவர்கள் சாதிக்க முடியும் என்பதை அந்த ஆறு புள்ளிகள் நிரூபித்துள்ளன. இன்று இந்த முறைக்கே பிரெய்லி என்று பெயர்.
இறைமக்களே, தேவன் ஒவ்வொரு தலைமுறையிலும் சிலரை எழுப்புகிறார். அவர்கள் பெரிதாகப் பேசுவதில்லை; ஆனால் அவர்கள் வாழ்வின் மூலம் வரலாறு பேசுகிறது.
அவர்கள் வசதியைத் தேடுவதில்லை; பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் “எனக்கு என்ன?” என்று கேட்பதில்லை; “என் மூலம் யாருக்கு என்ன?” என்று சிந்திக்கிறார்கள்.
கிறிஸ்தவன் என்பவன் பார்வையாளனாக அல்ல, பங்கேற்பாளனாக இருக்க வேண்டும். நம்பிக்கை என்பது பேச்சில் அல்ல, நம் நடத்தையிலுள்ளது. சுவிசேஷம் சொற்களில் அல்ல, நம் தியாகத்தில் தெரிய வேண்டும்.
நம் நேரம், நம் அறிவு, நம் வளங்கள், நம் திறமைகள் இவையெல்லாம் தேவனுடைய ராஜ்யத்துக்காக பயன்படுத்தப்படுகிறதா? அல்லது நம் சுய முன்னேற்றத்திலேயே முடங்கிக் கிடக்கிறதா?
தேவன் உன்னை ஆசீர்வதிப்பதற்காக மட்டும் அழைக்கவில்லை; மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றவே அழைத்தார். உன் கைகளில் இருக்கும் சிறியது, தேவனுடைய கைகளில் போனால் பெரிய மாற்றமாகும். நீ வசதியாக வாழலாம்; ஆனால், நீ தியாகமாக வாழ்ந்தால்தான் வரலாறு மாறும்.
இன்றைய கிறிஸ்தவர்களுக்கு தேவையானது இன்னொரு உபதேசம் அல்ல. இன்னொரு மாநாடும் அல்ல.
தேவையானது ஒரு தீர்மானம். “கர்த்தாவே, என் வாழ்க்கை எனக்காக மட்டுமல்ல, என் உழைப்பு என் குடும்பத்திற்காக மட்டுமல்ல, என் அழைப்பு இந்த தலைமுறைக்காக.
என் தியாகம் வருகிற சந்ததிக்காக.”ஒளி காண விரும்பும் உலகிற்கு, நீ ஒளியாய் மாறத் தயாரா? கேள்விகள் நிறைந்த சமுதாயத்திற்கு, நீ பதிலாக மாற விரும்புகிறாயா? தேவன் எழுதும் வரலாற்றில், உன் வாழ்க்கையும் ஒரு பக்கமாக இடம் பெற வேண்டாமா?
“கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.” (யோவான் 12:24)
இன்றே தீர்மானிப்போம்! வாழ்வதற்காக மட்டும் அல்ல; ஒரு தலைமுறையை வாழ வைப்பதற்காக.
– அருள்முனைவர். பெவிஸ்டன்.
