×

மங்கலங்கள் அள்ளித் தரும் மகாசிவராத்திரி

1. முன்னுரை

சிவனுக்கு இசைந்தது சிவராத்திரி. அவன் தேவிக்கு இசைந்தது நவராத்திரி. சிவராத்திரி ஒரு நாள். நவராத்திரி ஒன்பது நாள். ஒன்று என்பது முதல். ஒன்பது என்பது நிறைவு. சிவன் ஆதாரமாகவும் சக்தி அதன் விசையாகவும் இந்த உலகத்தை இயக்குகின்றனர். அதுவே அம்மையப்ப தத்துவம். நவராத்திரி காலத்தை தட்சிணாயன காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடும் நாம், சிவராத்திரியை உத்தராயண காலமாகிய மாசி மாதத்தில் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு சிவராத்திரி 15- 2- 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

சிவராத்திரி தத்துவம்

2. சிவராத்திரி என்ன பொருள்?

‘‘சிவன்” என்பதன் பொருள் ‘‘மங்கலகரமானவர்” என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் போன்ற ஐந்தொழில்களைச் செய்யும் கடவுள், யோகிகளின் தலைவர், மற்றும் அன்பின் வடிவம் எனப் பல அர்த்தங்களைக் கொண்டவர். திருநாவுக்கரசர் பாடிய ‘‘சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்” என்ற பாடல் சிவனை சிவம் எனப் போற்றும். சிவராத்திரி என்று சொன்னால், சிவனுக்கு உரியராத்திரி என்று பொருள். எல்லா மங்கலங்களையும் வாரி வாரி வழங்கும் ராத்திரி சிவராத்திரி என்பதால் அதை மிக விசேஷமாகக்
கொண்டாடுகின்றனர்.

3. எது இல்லாததோ அது

நாம் “சிவன்” என்று‌ அழைக்கும் போது, அதில் இரண்டு அடிப்படை தன்மைகளைப் பற்றி குறிக்கிறோம்.சிவன் என்ற சொல்லிற்கு “எது இல்லாததோ அது” என்று அர்த்தம். சிவன் என்பது எதுவுமற்ற தன்மை.இன்று நவீன விஞ்ஞானம், அனைத்துமே வெறுமையில் இருந்து தோன்றி மீண்டும் அதே வெறுமையிலேயே மறைவதாக நமக்கு நிரூபிக்கிறது. சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப் பெறுகிறது.

4. ஏன் இருளில் சிவராத்திரி?

கருவறையில் இருந்துதான் அனைத்தும் பிறக்கிறது, தோன்றிய அனைத்தையும் மீண்டும் தனக்குள் உள்ளிளுத்து கொள்வதும் அதே இருள் நிறைந்த வெறுமை தான்.‌ சிவனில் இருந்தே அனைத்தும் தோன்றுகிறது, மீண்டும் சிவனிடமே திரும்ப சேர்கிறது. சிவ வழிபாடு மிக பழமையானது. சிவ வழிபாடு உலகின் மிகவும் தொன்மையான, மூத்த வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே சிவ வழிபாடு இருந்ததற்கான அடையாளங்கள் (பசுபதி முத்திரை) கண்டறியப்பட்டுள்ளன. வேத காலத்திற்கும் முற்பட்ட காலத்திலேயே ‘‘ஆதியோகி” யாகத் திகழும் சிவபெருமான், யோகம் மற்றும் கலைகளின் கடவுளாகப் போற்றப்படுகிறார்.

5. மாசி மாதமும் சிவராத்திரியும்

மாசிமாதத்துக்கும் கும்ப மாதம் என்று பெயர்.இந்த மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி தான் மகா சிவராத்திரி.அப்படி என்ன கும்ப மாதமாகிய சிவராத்ரிக்கு விசேஷம்? கும்ப ராசி என்பது ஆண் ராசி. ஸ்திர ராசி. ஸ்திரம் என்றால் நிலைத்தது அழியாதது என்று பொருள். சிவம் என்ற தத்துவத்திற்கு அழியாதது என்று பொருள். பஞ்சபூதங்களிலேயே மிக முக்கியமானது காற்று. மூச்சு இல்லாவிட்டால் பேச்சு இல்லை. காற்றை உள்ளே செலுத்தி நிலை பெற்றதாக நின்று, உயிர் தத்துவத்தை இயக்குவது பரம்பொருளாகிய சிவம்.

கும்ப ராசி காற்று ராசி கும்பமாகிய இந்த உடம்பில் காற்றை உள் நிறுத்தி, உள்முக ஆற்றலைப் பலப்படுத்தி, சிவமாகிய தத்துவத்தை உணர்வது தான் சிவராத்திரியின் நோக்கம். நீங்கள் புறப் பார்வையைப் பார்க்கும்போது அகம் இருளடையும். ஆனால் சிவ ராத்திரியில் வெளியிலே(புறத்திலே) இருள் இருக்கும். ஆனால் அகம் விழிப்படைந்து ஒளி பிறக்கும். கும்பத்தில் காற்றை ஒடுக்கி, பரிபூரண தியான நிலையில் பரமேஸ்வரனை சிந்தித்து, அகம் மலர்ந்து, பூரணமாக விகசித்து, பரம் பொருள் என்னும் ஒளியை உணர்வது தான் சிவராத்திரி. இன்னொரு விசேஷம்.இந்த கும்ப மாத பௌர்ணமி (வளர் பிறையில்)தான் மாசிமகம் வருகிறது.இந்த மாதத்தில் அமாவாசையும் சிறப்பு.பௌர்ணமியும் சிறப்பு.

6. எத்தனை பெயர்கள்?

சிவனை மாதொரு பாகன் என்பர்.அர்த்த நாரீஸ்வரர் என்றும், ‘‘பெண்ண மருந் திருமேனி” என்றும், ஏழை பங்காளன் என்றும் நயத்துடன் வழங்கப்படுகிற மாதொரு பாகர் வடிவம் முதன்மையான சிவ மூர்த்தங்களுள் ஒன்றாகும். சிவ வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியு டையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்பெரியோன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்,மணிமிடற்றன், முக்கட்செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.

7. பஞ்ச பூத தலங்களும் சிவராத்திரியும்

பஞ்ச பூதங்கள் என்பது மண், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று. இது வெளியிலும் இருக்கிறது. உள்ளிலும் இருக்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. ஒன்று இல்லாமல் ஒன்று இருப்பதில்லை. ஒன்று குறைந்தாலும் உயிருக்கு பயனில்லை. இந்தத் தத்துவங்களே பஞ்சபூத தத்துவங்களாக பஞ்சபூதத் தலங்களாக விளங்குகின்றன. இந்த பஞ்ச பூதங்களும் ஈஸ்வர தத்துவமாக ஒடுங்கி, சிவராத்திரியில் லயம் ஆகி, விழிப்புணர்வு பெறுகிறது. இறப்பு எனும் மாய வலையில் இருந்து விடுபட்டு மெய்ப் பொருளாகிய செம்பொருள் என்னும் இறைநிலையை அடையச் செய்வது சிவராத்திரி.

சிவம், சக்தி இவை இரண்டும் இரட்டை தன்மைகள் ஒன்றில்லாமல் ஒன்றில்லை. அதே சமயத்தில் ஒன்றுக்குள் ஒன்று. இதனுடைய குறியீடுகளே சிவசக்தி தோற்றங்களாக விளங்குகின்றன. சக்தியின் இருப்பிடம் சிவமாகவும், சிவத்தின் வெளிப்பாடு சக்தியாகவும் விளங்கி இந்த பிரபஞ்சம் இயங்கு கின்றது. ராத்திரி என்பது அமைதி. எந்த ஒரு சக்தியும் வெளிப்படும் முன் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் அது வெளிப்படத் தொடங்கியவுடன் பல்வேறு பரிணாமத்துடன் இருக்கும். சிவராத்திரி முழுக்க அமைதி தியானம். (meditation) ஆற்றலின் இருப்பு. பிரார்த்தனை.(prayers) அதனுடைய வெளிப்பாடுதான் சக்தியின் வெளிச்சம். அக்னி ஸ்வரூபம். சிவ பரம்பொருளை உணர்தல்.

8. மாணிக்கவாசகரின் சிவராத்திரி தத்துவம்

சிவராத்திரியின் தத்துவத்தை மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தின் வழியாகத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றார். அதனால் தான் சைவ பெருமக்கள் திருவாசக முற்றோதலை கடைபிடிப்பதோடு, வைணவர்கள் எப்படி திருப்பாவையை நாள்தோறும் தப்பாமல் ஓதுவார்களோ, அப்படி சிவபுராணத்தை ஓதுதலை, தலையாய கடமையாகக் கொள்ளுகின்றனர். சிவபுராணத்தின் தொடக்கமே வாழ்த்துச் செய்தியுடன்தான் தொடங்குகிறது.

சிவம் என்ற மங்கலச் சொல்லின் மகத்தான பொருள் “நமசிவாய” என்ற ஐந்து எழுத்தில் தான் நிலை நின்று இயக்குகிறது. நமசிவாய என்ற ஐந்து எழுத்தின் மெய்ப்பொருள்தான் சிவராத்திரித் தத்துவம். அதனால்தான் மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தை ‘‘நமச்சிவாய வா அழ்க நாதன்தாள் வாழ்க” என்று தொடங்குகிறார். தமிழில் அழகான போற்றி மந்திரத்தை அருளிச் செய்தவர் மணிவாசகப் பெருமான்.

ஈச னடிபோற்றி, எந்தை யடிபோற்றி,
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி,
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி,
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி,
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி,
ஆராத இன்பம் அருளுமலை போற்றி!

இந்த போற்றி மந்திரத்தை சிவராத்திரி அன்று இரவெல்லாம் ஓத வேண்டும். அவனுடைய திருவடியை நினைந்து நினைந்து கண்ணீர் விட்டு அழ வேண்டும்.

9. அவனே ஒருவன்; அவனே பலவும்

சிவப்பொருளை ‘‘ஏகன்” என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார் மணிவாசகர். ஏகன் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. அவன் ஒருவனே என்ற பொருளும் உண்டு. அந்த ஒருவன் ஒப்பற்றவன், தலைவன் என்ற பொருளும் உண்டு. அவன் ஏகன் என்றால், “இத்தனைச் செயல்கள், இத்தனை ஸ்ரூபங்கள், இத்தனை வடிவங்கள், இத்தனைத் தத்துவங்கள், இத்தனைத் தெய்வங்கள் ஏன்?” என்ற கேள்வி எழும். மணிவாசகர் அதற்கும் பதில் தருகின்றார். அவன் ஏகன்; அதே நேரத்தில் அவன் அனேகன். சிவப்பரம்பொருள் உள் ஒடுங்கி நிலை நின்ற ஆற்றலாக இருக்கும் பொழுது ஏகன். பற்பல பரிணாமங்களில், பிரபஞ்ச சக்தியாக, பல்வேறு ஆற்றல்களாக, பல்வேறு செயல்களாக, விரிகின்ற பொழுது அவன் அனேகன்.ஆண், பெண், மாற்றுப்பாலினம் என்ற பால்வகைக்கு உட்படாத “சிவமாக” இருந்த கடவுள், பொது நிலைக்கு வரும்போதுதான் “சிவன்” ஆகின்றான். இதை திருமந்திரத்தின் முதல் பாடலான, “ஒன்றுஅவன் தானே,

இரண்டுஅவன் இன்னருள்..” எனும்
பாடலிலே திருமூலர் குறிப்பிடுகின்றார்.

சிவராத்திரியின் தொன்மை

10. சிவன் பெருமை பேசும் சங்க இலக்கியம்

கண்ணி கார்நறுங்கொன்றை’ எனத் தொடங்கும் புறநானூற்றுக் கடவுள்
வாழ்த்துப் பாடலில்,

‘‘பெண்ணுரு ஒரு திறனாகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”

என்ற வர்ணனை இடம் பெற்றுள்ளது. “தேவியைத் தன் உடலின் ஒரு பகுதியில் இடம்பெறச் செய்வது இறைவனின் இயல்பு; அவ்வாறின்றித் தன் உடலுக்குள் மறைத்து வைத்தலும் உண்டு” என்பது இதன் பொருள். சிவபிரான், பெண்ணுருவைத் தன்னுடலினுள் மறைத்து வைப்பது என்பது, ‘தேறு நீர் சடைக்கரந்து’ எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘கங்கை வார் சடைக்கரந்தார்’ என அப்பர் தேவாரத்திலும் இடம்பெறுகிற கங்காதரமூர்த்தி வடிவத்துடன் மட்டுமே பொருந்துவதாகும். எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில் சிவ பெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப்பெறுகின்றன.

11. சிலப்பதிகாரத்தில் சிவபெருமான்

சிலப்பதிகாரம் கடலோடு காதையில், ‘‘உமையவள் ஒரு திறனாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்” (42 – 43) என்று குறிப்பிடுகிறது. சிவபெருமான், பிறவா யாக்கைப் பெரியோன் என்பதும், நெற்றிக்கண் உடையவன் என்பதும், உமையவளை ஒருபாகத்தில் கொண்டவன் என்பதும், ஆலின்கீழ் அறமுரைத்தவன் என்பதும் தெரிய வருகின்றன. சிவ வழிபாட்டில் திருநீறுபூசி வழிபடுவதும், போரில் வெற்றிபெறச் சிவ பெருமானை வழிபடுவதும், விழாக்களில் சிவபெருமான் ஆடிய கூத்துக்களை ஆடுவதும் அறியப்படுகின்றன. குன்றக் குரவையில் முருக வழி பாட்டினுடைய செய்திகள் அனைத்தும் சைவ சமய வழிபாட்டின் அடிப்படையிலேயே கூறப்பெற்றுள்ளன.

மேலும் இக்காதையில் சிவ பெருமான் ஆலமரத்தின்கீழ் அமர்ந்து முனிவர்களுக்கு அறம் உரைத்து அருளியதும்,சிவபெருமான் கயிலை மலையில் வீற்றிருப்பதும், மலையரசன் மகளாகிய உமையவளை மணந்ததும் குறிக்கப் பெற்றுள்ளன. ஊர்காண் காதையில், மதுரை நகரில் சிவபெருமானாம் திருஆலவாயான் திருக்கோயிலில் நான்மறை ஓசைகள் முழங்கின என்ற செய்தி குறிக்கப் பெறுகிறது. சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட முதன்மை வழிபாடு சிவவழிபாடே என்பது பெறப்படுகிறது.

12. உருவமா? அருவமா?

பண்டைக் காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லுகின்றபொழுது சிவ பெருமான் சூடிய வஞ்சிமாலையை அணிந்துசெல்லும் வழக்கம் இருந்தது. இதைச் சிலப்பதிகார ‘வஞ்சிக்காண்டம்’ செங்குட்டுவன் மூலமாகக் குறிப்பிடுகிறது. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்னமேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’என்றும் கூறப் பெறுகிறது.

புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல வழியைப் பெறுவதற்கு துணையாக நிற்பது சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஆகும். இவை மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர்களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம்.

ஆலயங்களில் சிவராத்திரி

13. எல்லா ஆலயங்களிலும் சிவராத்திரி வைபவம்

மகா சிவராத்திரி அன்று இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயில்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் மற்றும் உத்திரகோசமங்கை மங்களநாதர் போன்ற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த இரவில் 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் பஞ்சபூதத் தலங்களை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரி இரவில் நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் நாட்டி யாஞ்சலி போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

14. திருக்காளத்தியில் மகா சிவராத்திரி

திருக்காளத்தியில் மகா சிவராத்திரி 10-நாட்கள் உற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்படும். திருத்தேர் பவனி என்ன, சிவராத்திரி இரவு நந்தி சேவை என்ன, என மர்க்களப்படும்.சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா இங்கு வெகு சிறப்பு.சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்து கால கண்டேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான். எளியவர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட ஈசன், ஆதி அந்தம் இல்லாத ஒரு ஜோதியாக விளங்கினாலும் தனக்கென ஒரு உருவத்தை தாங்கிய ஈசன் சிவராத்திரி அன்று லிங்கோத்பவராக காட்சி தருகின்றார். இந்த லிங்கோத்பவ மூர்த்தியை கோயில் பிராகாரத்தில் நாம் தரிசிக்க முடியும்.

15. மாத சிவராத்திரியும் மகா சிவராத்திரியும்

பொதுவாக மாதா மாதம் சதுர்த்தசி இரவு சிவராத்திரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. பல சிவனடியார்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் சிவராத்திரி விரதம் கடைப் பிடிப்பார்கள். சிவராத்திரிக்கு முதல் நாள், ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, சிவராத்திரி நாள் முழுக்க உபவாசமிருந்து அன்றைய தினம் இரவில், நான்கு ஜாமத்திலும் வழிபாடு செய்து , அதற்கு அடுத்த நாள் காலையில் நீராடி, சிவ பூஜை, சிவதரிசனம் செய்து, அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள்.

16. நான்கு யாமத்தில் நான்கு திருக்கோலங்கள்

64 திருக்கோலங்கள் ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளன என பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். அதில் சில வடிவங்களை அறிய சிவ ராத்திரி உதவும்.முதல் யாமத்தில் சோமாஸ்கந்தர், இரண்டாம் யாமத்தில் தென்முகக் கடவுள், மூன்றாம் யாமத்தில் லிங்கோற்பவர், நான்காம் யாமத்தில் சந்திரசேகரர்(ரிஷபாரூடர்) என சிவராத்திரியில் தரிசிக்கலாம்.

சிவராத்திரி கதைகள்

17. சிவராத்திரில் நடந்த விஷயங்கள்

சிவராத்திரியில் பல அற்புதமான செயல்கள் நடந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

1.அன்றுதான் படைப்புத் தொழிலை நான்முகன் தொடங்கியதாக ஒரு புராணம் கூறுகிறது.

2.இந்திரன் தனது இந்திரப் பதவியை தேவலோகத்தில் அடைந்ததும் இந்த தினத்தில்தான்.

3.வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன், சிவராத்திரி தவமிருந்து, ஐஸ்வரியங்களுக்கு அதிபதியானதும் இந்த தினத்தில் தான்.

4.சிவராத்திரியில் சிந்தை செய்து, தனக்குரிய நவராத்திரியைப் பெற்ற உமா தேவியார், சிவனின் இடது பாகத்தை பெற்றதும் இந்த தினத்தில்தான்.

5.தேவசேனாதிபதியாக விளங்குகின்ற முருகப்பெருமான், சிவன் அருளைத் தவமிருந்து பெற்றதும் சிவராத்திரித் திருநாளில் தான்.

6. இந்த சிவராத்திரியில் தான் தன்னுடைய தவ சக்தியால் புனிதமான கங்கையை விண்ணில் இருந்து மண்ணுக்கு வரவழைத்தான் பகீரதன். அதனால் முயற்சிகள் வெற்றி பெற சிவராத்திரி வழிபாடும், விரதமும் உதவும்.

18. அர்ஜுனன் தவம், கண்ணப்பன் பெற்ற தரிசனமும்

மஹாபாரதப்போரில் வெற்றி பெற சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற தலம் சிதம்பரம் பக்கத்திலே உள்ள திருவேட்களம். இறைவனுக்கு பாசுபதேஸ்வரர் என்ற திருநாமம். பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனன் பெற்ற நாள் சிவராத்திரி. மகா சிவராத்திரி உற்சவம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். கண்ணப்ப நாயனார் அருள் பெற்றதும் சிவராத்திரில் தான். சிவலிங்கத்தின் கண்களில் குருதி வழிகிற காட்சியைக் கண்டு, மனம் கொதித்து, தன்னுடைய கண்களையே தர முன் வந்த திருக்கண்ணப்பனின் பெருமை, இந்த உலகிற்குத் தெரிந்தது சிவராத்திரியில் தான்.

அதனால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளால், ‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்” என்றும், பட்டினத்தாரால் ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்” என்றும், திருநாவுக்கரசரால் ‘‘திண்ணன், கண்ணப்பன், வேடன்” என்றும் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார். தியாகத்தின் பெருமையை உணர்த்துவது சிவராத்திரி.

19. ஆயுள் தோஷம் நீங்கிய நாள்

ஒருவனுடைய ஆயுள் நிர்ணயம் என்பது மாறாதது. பெரும்பாலும் ஆயுள் நிர்ணய விஷயத்தில் ஈசன் தலையிடுவதில்லை ஆனால், காலன் பாசக் கயிறு வீசி வரும் நாளில், தன்னையே அண்டி, தன்னுடைய திருவடிகளை ஒரு குழந்தையைப் போல கட்டிக்கொண்டு கதறிய மார்க்கண்டேயனுக்காக, காலதேவனையே காலால் உதைத்து, ‘‘என்றும் பதினாறு” என்ற வரத்தை சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு அளித்தார். அப்படி காலனைக் கடிந்ததும் இந்த சிவராத்திரியில் தான். எனவே ஒருவருடைய மிருத்யு தோஷம் நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும், பெண்கள் தீர்க்க சுமங் கலித்துவம் பெறவும் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.

20. எலி பெற்ற வாழ்வு

ஒரு ஊரில் ஒரு கோயில் இருந்தது அந்தக் கோயிலில் ஒரு நெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த நெய்யின் வாசத்தால் ஒரு எலி அங்கு வந்தது. அப்பொழுது அந்த விளக்கின் திரி உள்ளே இழுக்கப்பட்டு பிரகாசம் இல்லாமல் எரிந்து கொண்டிருந்தது. நெய் குடிக்கும் ஆவலில் எலி அந்த விளக்கின் மீது பாய்ந்தது அப்பொழுது எதிர்பாராமல் அந்த விளக்கின் திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. நெய்யை குடித்துச் சென்ற எலி சில நாள்களில் ஒரு பாம்பால் கடிபட்டு இறந்து போனது. அந்த எலி அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு நல்ல காரியத்தினால் ஒரு எலி சக்கரவர்த்தி யாகும் வாய்ப்பினைப் பெற்றது. தெரியாமல் நல்ல காரியம் செய்யும் பொழுதே இத்தனைப் பெரும் புண்ணியம் கிடைக்கும் என்றால், நாம் தெரிந்து செய்யும் புண்ணியங்களுக்கு எத்தனை மதிப்பு?

இக்கதையை தேவாரத்தில் அப்பர் பாடுகின்றார்.

நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

தூண்டு சுடர் அனைய என்ற தொடர் மூலம், எலியால் தூண்டப்பட்ட விளக்கு சுடர்விட்டு எரிந்ததை நமக்கு நினைவூட்டுகின்றார்.

21. நீலகண்டன்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது, வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தினார். அந்த விஷம் உள்ளே போய் விட்டால், உலகம் வருந்துமே, என்று நினைத்த உமையம்மையார், அது தொண்டைக்கு கீழே இறங்காமல் தம்முடைய திருக்கரத்தால் சிவபெருமானுடைய கழுத்தில் தடுத்து நிறுத்தினார். அன்பினால் அம்பிகை அந்த விஷத்தை சிவன் கண்டத்தில் நிறுத்தியதால் சிவபெருமானுக்கு திருநீலகண்டன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இந்த சம்பவத்தை ஞானசம்பந்தர் ‘‘உலகு உய்யக்காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர் ஊரின் மல்கிப் புகலூர்” என்று பாடுகிறார். இந்த அற்புதமான சம்பவம் நடந்த தினம் சிவராத்திரி.

22. குரங்கு வில்வத்தால் பூஜித்த கதை

ஒரு சமயம், சிவபெருமான், ஒரு வில்வ மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. விதூமன் என்னும் கந்தருவன் எடுத்த மறுபிறவியே இக்குரங்கு என்பர். இவன் திலீபன் மகனென்றும், மாந்ததாவின் மகனென்றும் நூல்கள் கூறுகின்றன. குரங்கு மரத்தில் உள்ள வில்வ இலைகளைப் பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. தியானம் கலைந்து கண்களைத் திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வ இலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். ‘‘அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள் செய்து பரகதி அடைவாய்”, என அருளினார். இந்த குரங்கே முசுகுந்த சக்கரவர்த்தியாகப் பிறந்தது. முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள். வள்ளலார் இந்தக் கதையை ‘‘வில்வக் கிளை உதிர்த்த வெய்ய முசுக் கலையை செல்வத் துரை மகனாய்ச் செய்தனையே” என்று பாடுகிறார்.

சிவராத்திரி விரதம்

23. சிவராத்திரியின் நோக்கம் அகவிழிப்பு

அகிம்சை, சத்தியம், தயை, தானம், தூய்மை, புலனடக்கம். போன்ற அக விழிப்புணர்வை அடையச் செய்வதே சிவராத்திரியின் நோக்கமாகும். சிவராத்ரியில் சிவநாமாக்களைக் கூறி பூஜிக்க வேண்டும்.இறைவனின் பெயர்களை 16 முறை சொல்லி பூஜிப்பது ஷோடச பூஜை.108 முறை சொல்லி பூஜை செய்வது அஷ்டோத்திரம். முன்னூறு முறை இறைவனின் நாமங்களை சொல்லி பூஜிப்பது திரிசதி. ஆயிரம் முறை சொல்லி பூஜிப்பது சகஸ்ரநாம அர்ச்சனை. ஒரு லட்சம் முறை சொல்லி பூஜிப்பது லட்சார்ச்சனை. ஒரு கோடி முறை சொல்லி பூஜையை செய்வது கோடி அர்ச்சனை. சிவநாமத்தை ஒரு கோடி முறை சொல்வதன் மூலமாக பிறவிப்பிணி அகன்று பிறவா பேரின்ப நிலை பிறக்கும்.

24. நான்கு கால பூஜை

ஓராண்டு தொடர்ந்து செய்த சிவபூஜையின் பலன் ஒரு நாள் சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும். சிவராத்திரி .நான்கு கால பூஜை உண்டு. ஒரு சாமம் மூன்று மணி நேரம். பகலில் நான்கு சாமங்கள். இரவில் நான்கு சாமங்கள். சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய பிரதோஷ காலத்தில் ஆரம்பித்து, சூரிய உதயம் வரைக்கும் உள்ள நான்கு யாமங்களிலும், நான்கு விதமாக சிவ மூர்த்தங்களை அபிஷேகம் செய்து ,மலர்களால் அர்ச்சனை செய்து, தோத்திரங்கள் பாடி வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி பூஜை காலங்கள்

முதல் கால பூஜை – இரவு, 6:30- 9:30pm;
இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30pm;
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30am,
நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am..

25. இந்த நேரம் மட்டும் (மஹா நிசி) தூங்காதீர்கள்

இந்த கால நேரம் சூரிய உதயத்தைப் பொறுத்து அந்தந்த ஊருக்கு மாறும். அதைப் பொறுத்துதான் அந்தந்த ஊரில் உள்ள சிவாலயங்களில் பூஜை நேரத்தை நிர்ணயிப்பார்கள். இதில் இரவு தொடங்கி 14 நாழிகை கழித்து அதாவது இரவு 11:36 நிமிடத்தில் ஆரம்பித்து, இரண்டு நாழிகை நேரம் அதாவது 12 மணி 24 நிமிடம் வரை ‘‘மகா நிசி” காலம் என்பார்கள். இது மிகவும் விசேஷமானது. நான்கு ஜாமத்திலும் விழித்திருக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் இந்த மூன்றாவது சாமம் தொடங்கும் காலத்தில் விழித்திருந்து வழிபாடு செய்ய வேண்டும், பஞ்சாட்சரத்தை ஓத வேண்டும், குறைந்தபட்சம் சிவசிவ என்கிற மந்திரத்தை சொல்ல வேண்டும். ஹர ஹர மகாதேவா என்கிற மந்திரத்தை சொல்ல வேண்டும். குருவிடம் உபதேசம் பெற்றவர்கள் பஞ்சாட்சர ஜபம் செய்ய வேண்டும்.

26. கொன்றை மலரும் சிவனும்

கொன்றை மலர் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான, புனிதமான மலராகும், கொன்றை மலரை பிரணவ மலர் என்று கூறுவதும் உண்டு. ஐந்து இதழ்கள் உடையதால் புனிதமான ஐந்தெழுத்தையும் குறிக்கும். சரம் சரமாக பூத்து குலுங்குவதால் சரகொன்றை என்று பெயர் பெற்றது.. திருமுறைகளில் கொன்றை சிவனின் பூவாக வரும் அடிகள் பல உண்டு (முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து-கோளறு திருப்பதிகம்),தங்க நிற மலர்களுடைய கொன்றை மங்களகரமான மரம். திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திரு அச்சிறுபாக்கம், திருக்கோவலூர் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயில்களில் தலமரமாக அமைந்துள்ளது.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் ‘‘கொன்றை” யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இரு மலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று புராணம் கூறுகிறது.

27. வில்வமும் சிவபெருமானும்

வில்வம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த, புனிதமான இலையாகக் கருதப்படுகிறது. ஒரு வில்வத்தை வைத்து பூஜை செய்வது லட்சம் ஸ்வர்ணபுஷ்பத்தில் பூஜை செய்ததற்கு சமம் எனக் கூறப்படுகிறது. இது சிவனின் முக்கண் (அக்கினி, சூரியன், சந்திரன்), முப்படை மற்றும் முக் குணங்களைக் குறிக்கும் மூன்று இதழ்களைக் கொண்டுள்ளது. சிவ பெருமானை வில்வத்தால் அர்ச்சிப்பது மிகுந்த புண்ணியத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை. இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.

ஏற்கெனவே பூஜை செய்த பொருட்களை திரும்பப் பயன்படுத்த மாட் டார்கள். ஆனால், வில்வ இலையை மட்டும் உலர்ந்ததையும் மற்றும் ஏற்கெனவே பூஜைக்கு பயன்படுத்தியதையும் திரும்பவும் சிவனுக்கு பயன்படுத்தலாம். அவ்வளவு புனிதமாக வில்வம் கருதப்படுகிறது. மகா சிவராத்திரியன்று வில்வத்தை சிவனுக்கு படைத்து வில்வாஷ்டக பாரா யணம் செய்தால் ஏழேழு ஜன்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குமாம்.

28. விரதம் இருப்பது எப்படி?

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இரவு உறங்காமல் சிவபூஜை, சிவ நாம ஜெபம், சிவ தியானம், சிவ பஜனை, சிவ தரிசனம், சிவத்தொண்டு ஆகியவற்றைச் செய்ய வேண்டும் நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். அன்று அவசியம் சிவாலயம் சென்று நமஸ்காரம் செய்ய வேண்டும். சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.கிழக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.தெற்கு, மேற்கு நோக்கிய சந்நதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.வடக்கு நோக்கிய சந்நதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

29. எப்படி பிராகார வலம் செய்ய வேண்டும்?

அன்றைய தினம் பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது எல்லா இடங்களும் சிவ மூர்த்தங்கள் நிறைந்து இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஓம்நமசிவாய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே பிராகாரத்தைச் சுற்றவேண்டும். பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும். உட் பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது. பிராகார வலம் வந்து கோயிலின் உள்ளே நுழைகின்ற போது அங்கே பலரும் சிவ புராணம்,மற்றும் தேவார திருமுறைகளையும் படித்துக்கொண்டிருப்பார்கள்.

இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடி மரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். இருட்டில் தொடங்கிய வழிபாடு விடியலில் முடிகிறது.

நான்கு ஜாம வழிபாட்டினால் நம்மை சுற்றி இருக்கின்ற பொய்மை இருள் விலகி உண்மையான வெளிச்சம், சிவந்த சுடராக, நான்காவது ஜாமத்தின் முடி வில் நமக்கு காட்சி தருகிறது. “பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்று இந்த காட்சியை சந்திர சேகர சொரூபத்தை காட்டுவதுதான் சிவராத்திரியின் உடைய நிறைவுப்பகுதி.“நாளைய விடியல் நமக்கென்று இருக்கும்” என்ற நம்பிக்கைதான் சிவராத்திரி.

30. என்ன சொல்ல வேண்டும்?

சிவராத்திரியின்போது ஸ்ரீருத்ரம் போன்ற வேத மந்திரத்தைச் சொல்லி வழிபடவேண்டும்.

நமஸ்தே (அ)ஸ்து பகவான் விஸ்வேஸ்வராய
மஹாதேவாய த்ரியம்பகாய, திரிபுராந்தகாய ,
திரிகாக்னி காலாய ,காலாக்கினி ருத்ராய,
நீலகண்டாய, மிருத்யுஞ்சனாய,
ஸர்வேஸ்வராய, மஹாதேவாய நமஹ
பகவானே! விஸ்வேஸ்வரன் என்று சொல்லப்படுகின்ற உலக நாயகனே!

தேவர்களின் தலைவனே! மகாதேவனே! முப்புரங்களை எரித்தவனே! முக் கண்ணனே, ருத்ரனே, விஷத்தை அருந்தி நீலகண்டனானவனே, காலனை வென்றவனே, அனைத்து உயிருக்கும் ஈசனே, மகாதேவனே உனக்கு நமஸ்காரம் என்று சொல்கின்ற இந்தப் பகுதியைச் சொல்ல வேண்டும். அடுத்து, குரு நமச்சிவாயர் அருளிய

ஓம் எனும் எழுத்தில் உள்ளே
ஒளியதாய் விளங்குகின்ற
வாமனே கருணை நல்கும்
வள்ளலே நமச்சிவாய

என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். நிச்சயமற்ற தன்மையில் வாழுகின்ற மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு இறப்பின் நுட்பங்களை உணரச் செய்து, பேரின்ப நிலைக்கு அழைத்துச் செல்லுகின்ற வழிபாடுதான் சிவராத்திரி வழிபாடு.

எஸ். கோகுலாச்சாரி

Tags : Mahasivaratri ,Shivaratri ,Shiva ,Navratri ,
× RELATED இந்த வார விசேஷங்கள்