×

ஓபிஎஸ்சுக்கு விருந்து சிக்கலில் எம்எல்ஏ

ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார். மேலும் எடப்பாடிக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு சென்றனர். அந்த சமயத்தில், அதாவது 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் தற்போதைய பெருந்துறை அதிமுக எம்எல்ஏவான ஜெயக்குமாருக்கு சொந்தமான ரிசார்ட்டில் தங்கி இருந்தார்.

அப்போது ஓபிஎஸ்சுடன் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், மா.பா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மதிய உணவும் ஜெயக்குமாரின் ரிசார்ட்டில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது இதுதான் பெருந்துறை எம்எல்ஏவுக்கு எதிராக திரும்பி உள்ளது. அதாவது அதிமுக இரு அணியாக செயல்பட்ட போது ஜெயக்குமார் எம்எல்ஏ ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்தார் என அதிமுகவில் உள்ள சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இது வருகிற சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள ஜெயக்குமார்க்கு எதிராக கிளம்பி உள்ளது.

இதுகுறித்து ஜெயக்குமார் ஆதரவாளர்களிடம் கேட்ட போது, அய்யய்யோ அவர் ஓபிஎஸ் அணி எல்லாம் கிடையாது. எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். அதிமுக இரு அணிகளாக செயல்பட்ட போது ஓபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தான் ரிசார்ட் புக் செய்து ஓபிஎஸ் அணியினரை அழைத்து வந்தார். மற்றபடி ஜெயக்குமாருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சத்தியம் செய்கின்றனர்.

Tags : MLA ,OPS ,Edappadi Palaniswami ,Chief Minister ,Jayalalithaa ,Edappadi ,
× RELATED மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA...