×

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி தின்னர் கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி: மாமல்லபுரம் லாட்ஜில் சோகம்

சென்னை: மாமல்லபுரத்தில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனது 2 பெண் குழந்தைகளை தின்னர் கொடுத்து கொன்று விட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் அடுத்த ராஜா கார்டன் பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (35), பெயின்டர். இவரது மனைவி பிரீத்தி (32). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 7 வயதில் 2ம் வகுப்பு படிக்கும் லியா, அங்கன்வாடி மையம் செல்லும் 4 வயது சுபிக்ஷா என 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியிடம் இருந்து பிரிந்து கடந்த 3 மாதங்களாக தனது 2 பெண் குழந்தைகளுடன் பிரதீப் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, 4 நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்துள்ளார். அங்கு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், பிரதீப் தனது உறவினர்களை வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு, நான் கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். அதனால், தானும் தனது 2 மகள்களும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என கூறி விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். பின்னர், நேற்று மதியம் 2 மகள்களுக்கும் பெயிண்டில் கலக்கும் தின்னர் கொடுத்து கொன்று விட்டு, தானும் தின்னர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, உறவினர்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் விடுதிக்கு போலீசார் சென்று பார்த்தபோது, பிரதீப் மற்றும் 2 பெண் குழந்தைகளும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். போலீசார் அவர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பெண் குழந்தைகளும் இறந்து விட்டதாகவும், பிரதீப் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, பிரதீப்பை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 2 பெண் குழந்தைகளையும் மீட்டு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் 2 பெண் குழந்தைகளுக்கு தின்னர் கொடுத்து கொன்று விட்டு, தந்தையும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* விஷம் கொடுத்து மகள் கொலை தாய், மற்றொரு மகள் சீரியஸ்
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடி தட்டானூரை சேர்ந்தவர் மகேஸ்வரன். ஆட்டோ டிரைவர். மனைவி ஷாலினி (32) மகள்கள் மோகனஸ்ரீ (6), விஜயஸ்ரீ (4). கணவருக்கு வேறு பெண்ணுடன் பழக்கம் இருந்ததால் மனமுடைந்த ஷாலினி, நேற்று முன்தினம் இரவு மகள்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை ெசய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக எலி மருந்தை, மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். இதுபற்றி கணவரிடம் செல்போனில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டிற்கு வந்து மனைவி, மகள்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மகள் மோகனஸ்ரீ உயிரிழந்தார். ஷாலினி மற்றும் இளைய மகள் விஜயஸ்ரீ ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Mamallapuram Lodge ,Chennai ,Mamallapuram ,Pradeep ,Raja Garden Peravallur ,Kolathur ,
× RELATED திருச்சி ஜிஹெச்சில் நர்ஸ் வேடத்தில்...