×

ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் 8,000 பேர் பங்கேற்ற மாபெரும் மறியல் போராட்டம்

சென்னை: ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் 8,000 பேர் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினர். ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்தும், மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரியும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சென்னையில் திருவொற்றியூர், அம்பத்தூர், அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், கிண்டி தொழிற்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சுமார் 7,000 முதல் 8,000 பேர் வரை கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தக் கண்டனப் போராட்டத்தில் தமிழகத்தின் முதன்மையான 8 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் கைகோர்த்தன.

தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச), சிஐடியு , ஏஐடியுசி , ஐஎன்டியுசி , எச்.எம்.எஸ் , ஏஐசிசிடியு , ஏஐயுடியுசி , யுடியுசி மற்றும் டி.யு.சி.சி ஆகிய அமைப்புகள் முழுமையாகப் பங்கேற்றன. மேலும், டெல்லி போராட்டத்தை முன்னெடுத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் தங்களின் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு பெருந்திரளாகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஒன்றிய அரசு திட்டமிட்டுத் தமிழகத்தைப் புறக்கணிப்பதாகப் போராட்டக்காரர்கள் கண்டன கோஷமிட்டனர். குறிப்பாக தமிழகத்திற்கான கல்வி நிதி, குடிநீர் இணைப்பு நிதி மற்றும் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி எதையும் விடுவிக்காமல் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதியைத் தராமல், அத்திட்டத்தையே முற்றிலுமாக அழித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது.

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ தொடருந்து திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க மறுத்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு முற்றிலும் அழித்துள்ளது. தமிழகம் வழங்கும் வரி வருவாய்க்கு ஏற்ப உரிய நிதிப் பங்கீட்டை வழங்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக மக்களை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது ஆகிய முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் இத்தகைய தமிழக விரோத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்கத் திராணியின்றி, மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்குப் பயந்து, அதிமுக தனது சுயநலனுக்காகப் பாஜகவிடம் சரணாகதி அடைந்துவிட்டது என்று போராட்டக் களத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைக் காக்கவும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் பெருவாரியாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags : Chennai ,EU government ,Union government ,Tamil ,Nadu ,Dimuka ,Union BJP government ,
× RELATED ஊழல் புகார் – ஜி.எஸ்.டி. ஆணையர் சஸ்பெண்ட்