×

சாதிப்பெயர் நீக்கும் விவகாரம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தெருக்களில் சாதிப் பெயர் நீக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் குடியிருப்புகள் தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் பல முக்கிய பிரச்னைகள் உள்ள போது, இதில் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ‘‘அரசின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் இந்த அரசாணையில் குறைபாடுகள் உள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதில் சில கேள்விகள் எழுகிறது. அதை எவ்வாறு சரி செய்வீர்கள் என்பது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். சாதி பெயர்கள் நீக்கம் குறித்து 1978ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை அடிப்படையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : iCourt branch ,Madurai ,Paramasivam ,Aycourt Madurai branch ,Tamil Nadu ,
× RELATED கல்வி நிறுவனப் பாகுபாடுகளுக்கு...