×

கச்சத்தீவு திருவிழா முன்னேற்பாடு பணி தீவிரம்: இலங்கை கப்பலில் வந்திறங்கும் பொருட்கள்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இலங்கை கப்பலில் இருந்து பொருட்கள் வந்து இறங்குகின்றன. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் பிப்.27, 28ம் தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்தியா-இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் மொத்தம் 8 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இலங்கை அரசு தனது கடற்படை உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவை சுத்தம் செய்தல், பக்தர்கள் செல்லும் பாதையில் செடி, கொடிகளை அகற்றுதல், ஆலய வளாகத்தை சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆலயத்திற்கு வண்ணம் தீட்டுதல், நிழற்பந்தல் அமைத்தல், மின்சாரம், தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கப்பல்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரம் கூடுதலாக ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் இலங்கை கடற்படையினர் கப்பல் மூலம் கொண்டு வந்துள்ளனர். இந்திய பக்தர்கள் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு விழா குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு போலீஸ் விசாரணை பிறகு, பக்தர்கள் பயணம் செய்ய உரிய அனுமதி வழங்கப்படும். இதற்கான பணிகளை வேர்க்கோடு பங்கு விழா குழுவினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கூடுதல் இறங்குதளம் அமைக்கப்படுமா?
கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவை முடித்துக்கொண்டு திரும்பிய இந்திய-இலங்கை பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கடற்கரையில் குவிந்தனர். ஆனால், தற்காலிக இறங்கு தளம் ஒன்று மட்டுமே இருந்ததால் பக்தர்கள் தங்களின் படகுகளை பிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும், படகோட்டிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியதால் படகுகள் ஓன்றுடன் ஓன்று உரசி அவதிப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் படகுக்காக கடற்கரையில் பலமணி நேரம் வெயிலில் காத்துக் கிடந்தனர். இதனால் பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. எனவே, இந்த பிரச்னையை தவிர்க்க இந்த ஆண்டு இலங்கை அரசு கூடுதல் இறங்கு தளம் அமைக்கவும், போதிய குடிநீர் வசதி, நிழல் பந்தல் வசதி செய்துதரவும் உரிய நடவடிக்கை எடுக்க இந்திய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kachativu Festival ,Sri Lanka ,St. Anthony Shrine Festival ,Kakheti ,
× RELATED தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு...