×

நன்மை தரும் குருபகவான்

‘ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு’ என்பது பழமொழி.
‘குரு பார்க்க கோடி புண்ணியம்’

‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்ற பழமொழியும் உண்டு. இத்தகைய தலம் நவதிருப்பதிகளில் நவகிரக வரிசையில் ஐந்தாவது தலம், ஆழ்வார் திருநகரி. மிகவும் பிரசித்தி பெற்றது. பிறவி எடுத்ததன் பயனை அனுபவிக்கவும், அவர்களின் வாழ்க்கையில் நடந்த கர்ம கோளாறு குறைகள் நீக்கும் இடமாகும்.

பஞ்ச சேத்திரம்
1. ஆதிசேத்திரம்.
2. வராக சேத்திரம்.
3. சேஷ சேத்திரம்.
4. தீர்த்தச் சேத்திரம்.
5. தாந்த சேத்திரம்.
ஆதிநாத ஆழ்வார் எவ்வாறு தோன்றினார்?

மகாபாரதம் எழுதியவர் வியாசர். இவர் மகாவிஷ்ணுவின் அம்சமாவார். இவரின் புத்திரர் சுக முனிவர். ஒரு நாள், தம் தந்தையிடம் பூலோகத்தில் குருகா சேத்திரத்தின் மகிமை என்ன? அது எவ்வாறு தோன்றியது? என்று கேட்டார். மகன் கேள்வியைக் கேட்டு மகிழ்ந்தார் வியாசர். திருமாலின் திருவிளையாடலைக் கூறத் தொடங்கினார். முற்காலத்தில், படைக்கும் உத்தமமான உயரிய தொழிலை பிரம்மாவிடம் விஷ்ணு கொடுத்தார். ஆனால், நான்முகனாகிய பிரம்மாவிற்கு தவம் செய்ய வேண்டும் என்ற ஆசை வேட்கை உள்ளத்தில் எழுந்தது.
அதனால், மகாவிஷ்ணு இடத்தில்,

“நான் தவம் செய்ய வேண்டும் அதற்குரிய இடம் பூலோகத்தில் எது?” என்று கேட்டார். மகாவிஷ்ணு, “உன்னை படைக்கும் முன்பே பூலோகத்தில் சுயம்பு வடிவத்தில் நான் உருவானேன்” என்று கூறினார்.“பூவுலகில் அவ்விடம் எது?” என்று கேட்டார் பிரம்மா.

“தாமிரபரணி ஆற்றங்கரையோரமே” என்றார்,“அப்படி என்றால் அந்த இடத்தில் நான் தவம் செய்யலாமா”? என்று கேட்டதும்; பெருமாள் புன்னகை புரிந்து “உன் தவத்திற்கு உகந்தது” என்றுகூறி பிரம்மாவை பூலோகம் அடையும்படி செய்தார். பிரம்மா, பூலோகம் அடைந்து தாமிரபரணி ஆற்றின்கரை ஓரம், தற்காலத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கரையோரம் அமர்ந்து கடும் தவம் புரிந்தார். ஓராயிரம் ஆண்டுகள், எம்பெருமாளையே நினைத்து வேண்டினார். திருமால் கருணை காட்டவே இல்லை. அதன் பின்பு, தவத்திற்கு மனம் இறங்கி பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, குருவாக இருந்து படைப்பு தொழிலுக்குரிய நான்கு வேத மந்திரங்களையும் உபதேசித்து அருளினார்.

படைப்பு தொழிலுக்கு எல்லா காலத்திலும் பக்க பலமாக இருப்பேன் என்று வாக்களித்தார். பிரம்மன் இங்கு தவமிருந்து சுயம்பு மூர்த்தியாக திருமால் எழுந்தருளியதால், இந்த தலத்திற்கு “ஆதிநாதர்’’ என்ற “ஆதிசேத்திரம்’’ பெயர் ஏற்பட்டது. குருவாக இருந்து பிரம்மாவிற்கு வேத மந்திரம் கற்பித்ததால் இத்தலத்திற்கு “திருகுருகூர்’’ என்றும் “திருக்குருகா சேத்திரம்’’ என்றும் போற்றப்படுகிறது.

வராக சேத்திரம்

பூமி, பெரும் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. அச்சமயம், திருமால் பூமி அழியாமல் இருக்க, வராக மூர்த்தியாக அவதரித்து காப்பாற்றிய தலம். பூமாதேவிக்கு ஞான உபதேசம் செய்த இடம்.

தாந்தன் முக்தி

பல யுகங்கள் முன்பு ‘மந்தன்’ என்ற சிறுவன் இருந்தான். அவனுக்கு வேதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையால் வேதபாடசாலையில் சேர்ந்தான். அவனால் வேதங்களை படிக்க முடியவில்லை. குரு கூறிய மந்திரம் சீடன் மண்டையிலே ஏறவில்லை. கோபமுற்ற குரு “நீ எதுக்கும் தகுதி இல்லாதவன்” என ஏசினார்.

“மர மண்டைக்கு வேதம் ஏறாது” என்றுகூறி பாடசாலையை விட்டு அனுப்பிவிட்டார். அதனால் வருத்தப்பட்டு கோயில்களில் கைங்கரிய பணியை செய்து காலத்தைக் கழித்தே பின்பு மாண்டான். மந்தன் அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயரில் பிறந்தான். பண்புடனும் ஒழுக்க சீலத்துடன் வாழ்ந்தான். ஆயினும், அந்தணர்கள் யாருமே அவனை மதிக்காமல் ஒதுக்கினர். இந்தச் சூழ்நிலையில், மனம் உடைந்தால் சேத்திராடம் சென்று இறுதியில் திருகுருகூர் தலம் வந்தான். அங்கிருந்த ஆதிநாத பெருமாளை மனம் உருகி வேண்டி குமுறி அழுதான்.

அவன் மீது வாத்சல்யம் கொண்ட ஆதிநாதர், தாந்தனை துன்புறுத்தியவர்களை பாடம் கற்பிக்க நினைத்தார். அவர்களுக்கு கண் பார்வை இழக்கும் படி செய்தார். அனைவரும் ஏன் கண் பார்வை இழந்தோம் என்று புரியாமல் வருத்தம் அடைத்தனர். அசரீரி தோன்றி “நீங்கள் தாந்தன் என்ற ஒழுக்க சீலனை புறம் ஒதுக்கியதால், இத்தகைய தண்டனையை பெற்றீர்கள். நீங்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டு திருக்குருகூர் சென்று திருமாலை சரண்அடைந்தால் உங்கள் பாவங்கள் நீங்கி ஆதிநாதர் அருளால் மீண்டும் கண் பார்வை பெறுவீர்கள்” எனக் கூறியது. அதன் பின்பு அனைவரும் திருக்குருகூர் அடைந்தனர்.

தாந்தனிடம் மன்னிப்பு பெற்று, திருமாலின் திருவடியை பற்றி சரண் புகுந்தனர். திருமால் கண் பார்வையை மீண்டும் கிடைக்க வழி செய்தார். ஆதிநாதர் பூமிதேவி, ஸ்ரீதேவியுடன் தாந்தனுக்கு காட்சி தந்தார். அதனால் இந்த சேத்திரத்திற்கு “தாந்தன் சேத்திரம்’’ என்றானது.

திரு சங்கண்ணி துறை

தாந்தன் தங்கி ஆதிநாதரை வணங்கிய ஆலமரத்தில் கீழே வேடன் ஒருவன் தங்கிய காரணத்தால், அடுத்த பிறவியில் சங்கன் என்ற முனிவனாக பிறந்து திருமாலின் திருவடி அடைந்து முக்தி பெறக் கடுமையாகத் தவம் இருந்தான். ஒருநாள், நாரதர் சங்கனை சந்தித்தார். அவனுக்கு ஆற்றுப்படுத்தி, “நீ திருக்குருகூர் சென்று ஆதிநாதரை வணங்கி சரண் அடைந்தால், உனக்கு முக்தி கிடைக்கும்” என வழிகாட்டி சென்றார். சங்கன் சங்காக உருவம் மாறி திருக்குருகூர் சென்று திருமாலை வழிபட்டு தவம் இருந்தான். திருமால் தவத்தை மெச்சி “உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்க “முக்தி” என்று கூறியதும், திருமால் அவ்வாறே மோட்சம் கொடுத்தார். இத்தலத்தில் திருக் சங்கண்ணி துறை என்று இன்றும் போற்றப்படுகிறது.

யானைக்கு முக்தி

அக்காலத்தில், முனிவர்கள் இத்தலத்தில் எழுந்தருளி தீர்த்தங்களின் நீராடி எம்பெருமானை வணங்கி அன்றைய பொழுதை கழிப்பர். இவ்வாறு இருக்க, ஒரு நாள் யானையும், வேடனும் ஒருவரை ஒருவர் தாக்கி பெரும் சண்டை செய்து திருமாலின் நாமத்தைக் கூறிய படியே இருவரும் மாண்டனர். பூலோகத்தில் இருந்து யானையையும், வேடனையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவ தூதுவர்கள் வந்தனர்.

அந்த நேரத்தில் யானையும், வேடனும் சண்டையிட்டுச் செய்த பாவத்தின் பலன் இருவரையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல எம தூதர்களும் எதிர்ப்புறம் வந்து நின்றனர். திருமாலின் புண்ணிய ஆதிசேத்திரத்தில் நடந்தால், திருமாலின் பெயரை உச்சரித்ததால், எமதூதர்களால் எதிர்க்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் தங்களது கடமையைச் செய்யாமல், விஷ்ணு தூதர்களை எதிர்க்காமல் அவ்விடம் விட்டு சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த வேடனும், ஐந்தறிவு படைத்த யானைக்கும் இந்த சேத்திரத்தில் முக்தி கிடைத்து. இக்காட்சியைக் கண்ட முனிவர்கள் ஆச்சரியத்துடன் தங்களுடைய குருவான வசிஷ்ட முனிவர் கூறினர், என்ற தலவரலாறு செய்தியும் உண்டு.

ராமாயணத்தில் எமன்

ஸ்ரீராமர், வாழ்க்கை என்னும் எல்லை கோட்டை தொடுகின்ற நேரம், ஸ்ரீராமரை காலதேவன் அழைக்க, அதற்காக அவர் எமனோடு பேசுகின்ற பொழுது, லட்சுமணனை அழைத்து, “யாரையும் என்னை சந்திக்க அனுப்பாதே” எனக் காவலில் நிற்க வைத்துவிட்டு எமதர்மனோடு உரையாடச் சென்றார். அப்பொழுது ராமனைச் சந்திக்க துர்வாசர் முனிவர், அங்கே வந்தார். அவரைத் தடுத்து நிறுத்தி, தாங்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கூறி தடுத்தார். இதனால் சினம் அடைந்த துர்வாசர், லட்சுமணனின் வார்த்தையை மீறி ராமரை சந்திக்க உள்ளே சென்றார். துர்வாசரிடம் நல்லபடியாக பேசி அனுப்பினார், ராமபிரான்.

வெளியே வந்த துர்வாசர், லட்சுமணனை நோக்கி ‘`அசையா திருக்கும் பொருளாவாய்’’ எனச் சாபமிட்டார். இத்தகைய சாபத்தை கேட்டு, லட்சுமணரும் – ராமரும் அதிர்ச்சி அடைந்தார்கள். தன் சகோதரனிடம் மன்னிப்பு வேண்டினர், ராமன். மேலும், “துர்வாசர் கொடுத்த சாபத்தை மீண்டும் பெற இயலாது. இச்சாபம் உனக்கு மட்டுமல்ல கர்ப்பவதியான நிரபராதியான சீதாதேவியை காட்டுக்கு அனுப்பியதால், நானும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

ஆகவே, உறங்காத அசையா பொருளாக நீ மாறுகின்ற நேரத்தில், நான் அதன் உள்ளே அமர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி பிரம்மச்சாரியாக ‘சடகோபன்’ என்ற பெயரில் அவதரிக்கப் போகிறேன்” என்று கூறினார். மேலும்,“நீ முதலில் சென்று கர்ப்ப விருச்சமாக பூலோகத்தில் “உறங்காப் புளி’’ என்ற மரமாக அமைவாய். இரவிலும் புளிய மரத்தின் இலைகள் உறங்காது மூடாது இவ்வுலகைக் காக்கும்” என்று கூறினார்.

சேஷசேத்திரம்

ஆதிசேஷனின் அம்சமாக லட்சுமணன் புளிய மரமாய் பிறந்தார். ராமர், நம்மாழ்வாராக அவதரித்து, புளிய மரத்தில் பொந்தில் 16 வருடங்கள் தவம் செய்தார். புளிய மரம் பூப்பூக்கும், காய் காய்க்கும். ஆனால், ஒருபோதும் பழமாக பழுத்தது இல்லை. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இது நமக்கு காணக் கிடைக்காத பெரும் சொத்தாகும். இது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம் சுமார் 5100 வருடங்கள் பழமை உடையது. இந்த மரத்தினை சுற்றி 36 திருக்கோயில்களில் உள்ள பெருமாள் திரு உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பதினால் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஒரே சமயத்தில் 36 திவ்ய தேசங்களுக்கு சென்று வந்த பலனும் கிடைக்க பெறுவர். கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற தலமாகும். மணவாள மாமுனிகள். அவதரித்த தலமாகும். அவர்தான் கோயிலின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார்.

தீர்த்த சேத்திரம்

தாமிரபரணி ஆறு அதிலுள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாக விளங்குவதால் தீர்க்க சேத்திரம் எனப் பெயர் பெற்றது.

கோயிலின் சிறப்பு

கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தில் அடிபாகத்தில் பித்தளை போன் போடப்பட்டுள்ளது. அதன் இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பெருமை வாய்ந்ததாகும். கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயில் கொடுக்கப்பட்டது எனத் தெரிகின்றது. இக்கோயிலில் சிற்பம் கட்டிடக்கலை ஓவியக்கலை எல்லாம் சிறந்து விளங்குகின்றது.நம்மாழ்வார் 4 வேதங்களை சமமாக திவ்விய பிரபந்தத்தில் போற்றி இயற்றினார்

ரிக் வேதம் – திருவிருத்தம்.
யஜூர்வேதம் – திருவாசிரியம்.
சாமவேதம் – திருவாய்மொழி.
அதர்வண வேதம் – பெரிய திருவந்தாதி.

நம்மாழ்வார், தமிழ் வேதங்கள் என்று அழைப்பர். வைணவ திருக்கோயில்களில் நம்மாழ்வார் பெருமாளின் திருவடி ஸ்ரீ சடாரியாகப் போற்றப்படுகிறது. மற்ற ஆழ்வார்கள் நம்மாழ்வாரின் அபயங்களாக (உறுப்புகளாகப்) போற்றப்படுகின்றன.

“ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து மற்றொர்
தெய்வம் பாடியாடிப் பணிந்து பல படிகளால்
வழியேறிக் கண்டீர் கூடி வானவரத்தே
நின்ற திருக்குருகூரதனுள் ஆடுபுட்கொடி
யாது மூர்த்திக்கு அடிமை புகுவதுவே!’’

திருவிழாக்கள்

ஆனி வசந்த உற்சவம், ஆடி ஸ்வாதி, ஆவணி திருபவித்திர உற்சவம், உறி அடித்தல், புரட்டாசி நவராத்திரி உற்சவம், ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், கார்த்திகை திருக்கார்த்திகை தீபம் திருவிழா, திருமால் ஆழ்வார் ஸ்ரீவைகுண்டம் செல்லும் திருவிழா, சித்திரை சித்ராபௌர்ணமி, வைகாசி கருடசேவை, விசாகத் திருவிழா, மாசி உற்சவம், பங்குனி உற்சவம். மேலும், வைகுண்ட ஏகாதசி வருடம் முழுவதும் கொண்டாடப்படும்.

பிரார்த்தனை

நவகிரக தோஷங்கள் நீங்க இத்தலத்தில் வந்து பிரார்த்தித்தால், தோஷங்கள் நீங்கும்.

நேத்திக்கடன்

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், தாங்கள் விரும்பிய பொருட்களைக் கொண்டு காணிக்கையாக பெருமாளுக்கு செலுத்துகிறார்கள்.

மூலவர்: ஆதிநாதன், ஆதிபிரான் நின்ற கோலம்.
உற்சவர்: பொலிந்து நின்றபிரான்.
தாயார்கள் பெயர்: ஆதிநாத வள்ளி, திருக்குருகூர்வள்ளி. (தனி சந்நதிகள் உண்டு)
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருசங்குகண்ணித் துறை
புராண பெயர்: திருக்குருகூர்.
தலவிருட்சம்: புளிய மரம் (உறங்காபுளி)
விமானம்: கோவிந்த விமானம்.
கிரகம்: குரு ஸ்தலம்.

நடை திறக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.

எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து ஆழ்வார்திருநகரிக்கு செல்ல 24 கி.மீ., தூரமும், தூத்துக்குடியில் இருந்து 35கி.மீ., தூரத்திலும் செல்லலாம்.

பொன்முகரியன்

Tags : Gurkuur ,Nawagiraga ,Nawatripathi, Alwar Thirunagari ,
× RELATED திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்