×

ஆசிய சாம்பியன்ஷிப் பிஸ்டல் பிரிவு; இந்திய வீராங்கனை இஷாவுக்கு 2 தங்கம்: வெண்கலம் வென்றார் சாம்ராட்

புதுடெல்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை இஷா சிங் சிறப்பாக செயல்பட்டு இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். புதுடெல்லியில் ஆசிய பிஸ்டல்/ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை இஷா சிங் 239.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

சீன தைபே வீராங்கனைகள் செங் யெங் சிங் 235.4, யு அய்வென் 217.7 புள்ளிகள் பெற்று முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர். மற்றொரு குழு போட்டியில் இந்திய வீராங்கனைகள் சுருச்சி, மனு பாக்கர், இஷா, ஒட்டு மொத்தமாக 1726 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். இப்போட்டியில் வியட்நாம் 1713 புள்ளிகளுடன் வெள்ளி, சீன தைபே 1711 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.

கடந்த ஆண்டு கெய்ரோவில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் சாம்ராட் ராணா, 220.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். இப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் விளாடிமிர் ஸ்வீச்னிகோவ், 242 புள்ளிகளுடன் தங்கம், கஜகஸ்தானின் வலேரி ராகிம்ஸான் 241 புள்ளிகளுடன் வெள்ளி வென்றனர்.

Tags : Asian Championship ,Isha ,Samrat ,New Delhi ,Isha Singh ,Asian Shooting Championship ,Asian Pistol/ ,Rifle Shooting Championship ,
× RELATED டி20 பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வெற்றி