சென்னை, பிப்.4: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களின் உடல்நலன் ஆரோக்கியம் மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காகவும் மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் உருவாக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை சிறப்பாக பராமரிக்க முன்வரும் தனியர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், அறக்கட்டளைகள், பல்வேறு அமைப்புகளின் சங்கங்கள் உள்ளிட்ட விருப்பமுள்ள அமைப்புகளுக்கு உரிய நிபந்தனைகளின்படி 2 ஆண்டுகளுக்கான அனுமதி சென்னை மாநகராட்சி ஆணையரால் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.
காலவிரயத்தை தவிர்த்திடும் வகையிலும், விரைவில் அனுமதி பெற்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை பராமரிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையாளருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை தத்தெடுப்பு செய்து பராமரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில் உ்ளள பூங்காக்களுக்கு (மண்டலங்கள் 1 முதல் 5 வரை) வடக்கு வட்டார துணை ஆணையாளரிடம் (அலுவலக முகவரி: ராயபுரம் மண்டல அலுவலகம், எண்.62, பேசின் பிரிட்ஜ் சாலை, சென்னை-600 079, தொலைபேசி எண்.044-25200025 / 9445025800) விண்ணப்பிக்கலாம்.
மத்திய வட்டாரத்திற்குட்பட்ட திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் உள்ள பூங்காக்களுக்கு (மண்டலங்கள் 6 முதல் 10 வரை) மத்திய வட்டார துணை ஆணையாளரிடம் (அலுவலக முகவரி: அண்ணாநகர் மண்டல அலுவலகம், எண். பழைய எண்.12பி, புதிய எண்.36பி, புல்லா அவென்யூ, செனாய் நகர், சென்னை.600 030, தொலைபேசி எண்: 044-26640224 / 9445190150) விண்ணப்பிக்கலாம்.
தெற்கு வட்டாரத்திற்குடபட்ட வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள பூங்காக்களுக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளரிடம் (அலுவலக முகவரி: அடையாறு மண்டல அலுவலகம், எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, சென்னை-600 020, தொலைபேசி எண்.044-24425982 / 9445190100) விண்ணப்பித்து அனுமதி பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
