×

இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது… குற்றவாளிகளை சுற்றி வளைக்கும் ஏஎஸ்ஐ அர்ஜூன் ரோபோ: ஆந்திராவில் அறிமுகம்

 

திருமலை: ரயில் நிலையத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் ஏஎஸ்ஐ அர்ஜூன் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கொடுத்த தகவலின்பேரில் 2 குற்றவாளிகள் பிடிபட்டனர். நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரோபோ போலீசை அறிமுகப்படுத்தி உள்ளனர். ‘ஏஎஸ்ஐ அர்ஜூன்’ என பெயரிடப்பட்ட இந்த ரோபோ ரயில் நிலையத்தில் தீ மற்றும் புகையை கண்டறிந்து பயணிகளை எச்சரிக்கை செய்யும். மேலும் ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் வருபவர்களின் புகைப்படங்களை எடுத்து, சந்தேக நபர்களையும், ரயில் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை அதிகாரிகளுக்கு அனுப்பும்.

அதன்படி விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ள ஏஎஸ்ஐ அர்ஜூன் ரோபோ நேற்று ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் ரயில்வே போலீசார், அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் பிடிபட்ட 2 பேர் மீதும் ஒடிசா மாநிலம் ராயகடா உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் பிடிபட்டவர்களின் பெயர்கள் அடப்பா சிவா, பங்காரு என தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

ஏஎஸ்ஐ அர்ஜூன் ரோபோவின் பார்வையில் இருந்து இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பதை அறிந்து பயணிகள் மட்டுமின்றி போலீசாரும் ஆச்சரியமடைந்தனர்.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Railway Protection Force ,
× RELATED இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்; 5 முறை...