அம்பை,பிப்.4: விகேபுரத்தை சேர்ந்த கணபதி மகன் அய்யப்பன் (40). இவர் பாபநாசம் கோயில் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். இவரது கடையில் சங்கர வடிவேல் (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதே பகுதியில் விகேபுரத்தை சேர்ந்த அருள் சந்தானம் என்பவர் பஜ்ஜி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்.11ம் தேதி அய்யப்பன் ஓட்டல் கடைக்கு சென்ற அருள் சந்தானம் சாம்பார் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அருள் சந்தானம் தனது பஜ்ஜி கடைக்கு திரும்பினார். ஆத்திரத்தில் இருந்த அய்யப்பன் அங்கு பஜ்ஜி கடைக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென கொதிக்கும் எண்ணெயை அருள் சந்தானம் மீது ஊற்றினார். இது குறித்து அருள் சந்தானம் அளித்த புகாரின் பேரில் விகேபுரம் போலீசார் ஓட்டல் உரிமையாளர் அய்யப்பன், ஊழியர் சங்கர் வடிவேல் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரவீன் ஜீவா அய்யப்பனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். சங்கர வடிவேல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வக்கீல் வனிதா ஆஜரானார்.
