சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும். பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது.
இந்த முறை தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியா கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுகதலைமையில் மற்றொரு அணி, தவெக தலைமையில் இன்னொரு அணி, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என 4 முனைப்போட்டி நிலவுகிறது. திமுக பலம் வாய்ந்த கூட்டணியுடன் களம் காண இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த அதே கட்சிகள் மீண்டும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக இப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கைகோர்த்துள்ளது. இன்னும் சில கட்சிகள் வர உள்ளன.
அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக(அன்புமணி) அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை சந்திக்கும் வகையில் ஆளுங்கட்சியான திமுக அடுத்தடுத்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரையை 234 தொகுதிகளிலும் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த பிரசாரம் இந்த மாதம் முழுவதும் நடக்கிறது. இதே போல அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடியும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். அதே நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை.
தேர்தல் தேதி நெருங்குவதால் விரைவில் இந்த பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பது தெரியவரும். இந்த நிலையில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், விரைவில் கூட்டணிப் பேச்சு வார்த்தை குழு அமைக்கப்பட்டு கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும்” என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் அளித்த பதில் வருமாறு: தேர்தல் கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளதே இது குறித்து உங்கள் கருத்து? நீங்களும் சாதகமாக இருங்கள். புதிய எதிரிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நாங்கள் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
